அ முதல் ஃ வரை

நான் படித்தது, பார்த்தது, என்னை பாதித்தது என எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள...

Wednesday, February 15, 2006

பாதுகாப்பது நம் கடமை

இன்றைய தினமலரில் புதுப்பிக்கபட்ட மீனாட்சி அம்மன் கோவில் மடப்பள்ளியின் புகைப்படம் வெளியாகி இருந்தது. புதிய கோயில்
போன்று தூண்களில் ஒரு பொலிவு. கடந்த ஐந்து வருடங்களாக புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. தெப்பக்குள சுவற்று ஓவியங்களை அழித்து மறுபடியும் வரைந்து கொண்டிருக்கிறார்கள். (இவர்கள் காட்டுகிற வேகத்தின் படி முழுமையாக ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்.) எதுவானாலும் இந்த முயற்சி சந்தோஷம். சனீஸ்வர சந்நிதிக்கு பின்னால் உள்ள நடராஜர் சந்நிதி மண்டபத்தை தியான மண்டபமாக உபயோகிக்க வழி செய்திருக்கிறார்கள்.

ஆனால் கோயிலுக்கு செல்பவர்கள்கள் அதன் கலை அழகையும், திறனையும் பாரம்பரியத்தையும் அதை போற்றி பாதுகாக்க வேண்டிய
முக்கியத்துவத்தையும் உணர்ந்திருக்கிறார்களா தெரியவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்னால் நான் கோயிலுக்கு சென்றபோது கண்டவை அதிர்ச்சி ரகம். கோயில் தூண்களை (சில) நூதன முறையில் சுத்தம் செய்து புதியது போல ஆக்கியிருக்கிறார்கள். ஆனால் மக்கள் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் குங்குமத்தையும் திருநீற்றையும் அவற்றின் மீது கொட்டி விட்டு
செல்கிறார்கள். ஏற்கனவே சுவாமி சந்நிதி கொடிமரம் அருகே ஒரு தூணில் ஆஞ்சநேயர் அஞ்சனம் தடவி நிற்கிறார். இது போதாது எனவோ மற்றொரு தூணில் உள்ள ஒரு அம்மன்(?) உருவத்தை கண்டுபிடித்து பாவாடை சுற்றியிருக்கிறார்கள். கூடுதலாக தரை எங்கும் குங்குமம் இரைந்து கிடக்கிறது. விளக்கு, பேப்பர் மாலை இத்யாதி என மேலும்...ஆபத்து என்னவெனில் சாமி குற்றம் என்ற பெயரில் இந்த பழக்கங்களை தடுக்க முடியாதிருப்பது தான்.

விளக்கு போடுகிறேன் என துர்கை சந்நிதி, தட்சிணாமூர்த்தி சந்நிதி என தரை முழுவதும் எலுமிச்சை கரை ஏற்படுத்தி இருக்கிறார்கள். எந்த வெண்ணெய் வியாபாரி ஆரம்பித்த வழக்கமோ இன்னும் காளி சிலையும் அதன் பிண்ணால் உள்ள தூண்களும் வெண்ணெய்க்கரை.

தெப்பத்தை பூங்காவாக மாற்றுகிறேன் என இறங்கி ஒரே தொட்டி + இரும்பு கிராதி மயம். இது உள்ளே என்றால் வெளியே சரியான கழிப்பறை வசதியில்லாததால் குளோரினும் சிறுநீரும் குப்பையும் சேர்ந்து புதிய வாடை. சில சிறுநீர் தடுப்பையும் கோயில் சுவர் அருகேயே கட்டியிருக்கிறார்கள்.
இதில் கோயிலை உலக அதிசயமயமாக்க தடபுடல் ஏற்பாடு. தினமலர் போன்ற பத்திரிக்கைகள் உலக அதிசயமயமாக்கலுக்கு செலவிடும் பக்கங்களை தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒதுக்கலாம். கோயிலின் பெருமையும் அதன் கலை அழகும் போற்றி பாதுகாக்க வேண்டியது நம் கடமை என்பதை நெஞ்சில் பதிய தினசரி முயற்சி செய்ய வேண்டும். அது ஒரு நாள் அல்லது ஒரு வருட சம்பிரதாயம் அல்ல. தினசரி செய்ய வேண்டியது. செய்வார்களா?

புதுப்பிக்கும் நல்ல முயற்சியில் கூட அதன் தனித்தன்மை குலையாமல் செய்ய திட்டமிடுவது அவசியம். அதற்கு தேவை ஆராய்ச்சியும், தேர்ச்சியான நிபுணர்களின் உதவியும் தான். அவசரம் அல்ல.

இந்த அக்கறையற்ற பட்டியலில் மேலும் பல இருக்கிறது. தஞ்சை பெரிய கோயில், சிதம்பரம், Sriரங்கம் ஒவ்வொன்றும் ஒரு சோகம்.

= அடித்தால் தமிழில் sri வரவில்லை. யாரேனும் தெரிந்தால் தகவல் தாருங்களேன். நன்றி்!

நீங்கள் சொன்னது: (0)

Post a Comment

<< முகப்பு