கண்ணாடி பூக்கள்
இரண்டு வெவ்வேறு படங்கள். ஒன்று ஒரு வாலிபனை பற்றியது. மற்றொன்று பாலகனை பற்றியது. இருவருமே தாங்கள் முற்றிலும்
திட்டமிடாத ஒரு மரணத்துக்கு காரணம் ஆகிவிடுகிறார்கள். அது விபத்து என்றாலும் கொலை குற்றமாக கருதப்பட்டு தண்டனை
அனுபவிக்கிறார்கள்.
"கண்ணாடி பூக்கள்" என ஷாஜகான் இயக்கிய படம் ஒன்று. "அது ஒரு கனாக்காலம்" என பாலுமகேந்திராவின் படம் மற்றொன்று.
இந்த இரு படங்களுமே இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத காவல் அதிகாரியை காட்டுகின்றனர். பாலகனிடம் இரக்கம் காட்டாமல்
சட்டமும் கடமையும் முக்கியம் என கருதும் ஒருவர். சட்டம் முக்கியம் தான்; அதைவிட அந்த சட்டத்தின் பணி குற்றத்தை உணர
செய்வதையும் திருந்த வாய்ப்பு கொடுக்கவுமே என்பதால் அது நிறைவேறிய பிறகு மனிதாபம் காட்டி மன்னிப்பதே நியாயம் என கடமை மீறும் ஒருவர்.
படவிமர்சனங்கள் இந்த இடுகையின் நோக்கமல்ல. அது உணர்த்தும் உளவியல் துன்பங்களை பற்றித்தான்.
கோயில் ஒன்றில் ஒரு தம்பதியையும் அவர்களின் குழந்தைகளையும் கண்டேன். 3 வயது மதிக்கதக்க ஒரு பெண் குழந்தை. 1 வயது
முடியாத ஆண் குழந்தை. கோயிலுக்குள் வந்தவுடன் பெற்றவர்கள் பிள்ளைகளை விட்டுவிட்டு பிரார்த்தனையில் ஒன்றி விட்டார்கள்.
வந்திருந்த மற்றவர்கள் அந்த ஆண் குழந்தையை கொஞ்ச ஆரம்பித்தார்கள். தங்கள் சாவிக்கொத்தை கொடுத்தார்கள். தூக்கி
கொஞ்சினார்கள். பெண் குழந்தையால் பொறுக்க முடியவில்லை. அது அம்மாவின் கவனத்தை தேடியது. அம்மாவோ கண்டு
கொள்ளவே இல்லை. உட்கார்ந்திருந்தவரின் தொடையில் ஏறி குதித்தது. படிக்க கையில் வைத்திருந்த பாட்டு புத்தகத்தை
பிடுங்கியது. அம்மா அடிக்காத குறைதான். ஆனால் மகனிடமோ அதே புத்தகத்தை காட்டி விளையாட்டு. அடுத்தவர்கள் இன்னும்
பையனிடம் விளையாட்டு காட்டி கொண்டிருந்தார்கள். பார்ததது. அவன் கையில் இருந்த சாவிக்கொத்தை பிடுங்கி எறிந்தது.
அம்மாவிடம் அவனை தர தர வென இழுத்துவந்து போட்டது. பையன் அதையும் ஒரு விளையாட்டாக எடுத்துக்கொண்டு சிரித்துக்
கொண்டேயிருந்தான். ஆனால் அப்பாவோ அம்மாவோ இந்த காட்சியின் பின்னால் உள்ள உணர்வை கண்கூடாக தெரியும் போதும்
உணரவேயில்லை. அல்லது இது சகஜம் என வி்ட்டிருக்கவேண்டும்.
"பிளாக்" என்ற ஹிந்தி படத்தில் ராணி முகர்ஜியின் சகோதரி பாத்திரம் ஒன்று வரும். கண் தெரியாத சகோதரிக்கு பெற்றவர்கள்
காட்டும் கூடுதல் அக்கறை வெறுப்பாக மாறி தான் படும் துயரத்தை சொல்வார்.
இதே போன்ற உளவியல் ரீதியாக பலர் தினம் தினம் நிதானம் இழக்கிறார்கள். தன்னம்பிக்கை இழக்கின்றனர். சிலர் பயத்தை
உருவாக்கிக்கொண்டு ஒடுங்கிவிடுகின்றனர். சிலர் தவறான தொடர்புகள், போதை மருந்துகள் என பாதை மாறுகிறார்கள். இவற்றையெல்லாம் நின்று நிதானமாக ஆதரவாக கவனிக்கத்தான் ஆள் இல்லை.
இன்றைய போட்டியான உலகில் குழந்தைகளை பெற்றவர்கள் படுத்தும் பாடு சொல்லி மாளாது. ஒரு பத்து வயது சிறுவனுக்கும்
சிறுமிக்கும் தங்களுக்கு இருக்கிற தன்மான உணர்வு இருக்கும் என உணர்வதேயில்லை. மற்றவர்கள் முன்னால் கண்டிக்கப்படும்
போது அவமானமாய் உணர்கிறார்கள். முளைச்சு மூணு இலை விடலை அதுக்குள்ள பாரு என அவற்றை அலட்சியபடுத்தியும்
விடுகின்றனர்.
அந்த இரு படங்களில் வரும் காவல் அதிகாரிகளின் செயல்களுமே உளவியல் சம்பந்தமுடையது தான். சட்டம் கடமை எங்கே
தேவையென ஒருவருக்கு புரிந்திருக்கிறது. ஆனால் அதன் குறுக்கே புகுந்து தான் மன்னிக்க முடிகிறது. மற்றவருக்கு சட்டம் கடமை
மட்டுமே முக்கியம் எனப்படுகிறது. தண்டனை வாங்கிக்கொடுப்பது மட்டுமே தன் வேலையென நடந்து கொள்கிறார். அது தவறில்லை
தான். ஆனால் கண்டிப்போடு அணுகுமுறையில் புரிதலும் இருக்க வேண்டியது அவசியம்.
பெற்றவர்களும் ஒரு குழந்தையை, வளர்ந்த மகனை மகளை எவ்வாறு வளர்ப்பது என தடுமாறி எரிச்சலோ அல்லது காணாமலோ
இருந்து விடுகிறார்கள். இதற்கு ஒரு தீர்வு என்று ஒன்றுமில்லை. ஒவ்வொருவருக்கும் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி ஒரு வழிகாட்டுதல்
தேவைப்படுகிறது. இந்த விவாதங்களை பகிர்தலை ஊடகங்கள் செய்ய முடிந்தால் பெரும் பயன் விளையும்.
ஆனால் தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் ஒரு பன்ஞ் டயலாக்கும், மதிப்பெண் கொடுத்தும் திருப்தி அடைந்துவிட்டன. இதில்
நாயகனுக்கு எதிராக, சார்பாக என்ற அரசியல் வேறு.
இவர்கள் நினைத்திருந்தால் ஒரு ஆரோக்கியமான விவாதத்தையோ அலசலையோ உருவாக்கி புதுப்பாதை காட்டியிருக்கலாம். எங்கே?
நீங்கள் சொன்னது: (0)
Post a Comment
<< முகப்பு