ராதிகா - ராடன் - தங்கவேட்டை
கிழக்கே போகும் ரயிலில் வந்திறங்கிய ராதிகாவா இது என்று இன்றைக்கு ராதிகாவை பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
ராதிகா என்ற நடிகையை, ஒரு தயாரிப்பாளரை பார்க்கையில் இது! இது தான் வளர்ச்சி! என சொல்லும்படியாகவே இருக்கிறது. ஒன்றுமே தெரியாமல் வந்து இது தான் நமது வாழ்வு என தீர்மானித்தவிட்ட பிறகு அதில் தன் முயற்சியை செலுத்தி தன் ஆளுமையை பதிவு செய்வது அவ்வளவு எளிதல்ல. இன்றைய நடிகர்களில் சூர்யாவை அந்த பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
ராதிகாவை பலர் ஒரு நடிகை என்பதை மீறி அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்து ஒதுக்கி விடுகிறார்கள். ஆனால் இன்றைய பெண்களுக்கு ராதிகா கண்டிப்பாக ஒரு பாடம் தான்.
நடிகையாக மட்டுமில்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் ஆகி தமிழ்நாட்டையே சித்தி, அண்ணாமலை, செல்வி என இரவு காத்திருக்க வைத்திருக்கிறார். இந்த தொடர்கள் தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் சன் நெட்வொர்க்கின் மற்ற சானல்களிலும் ஒளிபரப்பாகிறது. சூர்யாவும் உதயாவும் ரீமேக் செய்து ஒளிபரப்புகின்றன. ஜெமினியில் டப்பிங் குரலுடன் வருகிறது.
(தொடர்கள் வெற்றியடைந்திருந்தாலும் அவற்றின் தன்மை கொஞ்சம் கவலை அளிக்கிறது. பழிவாங்கலும் நல்லவர்கள் கடைசி வரை போராடுவதும் இழந்து முன்னேறி பின் மன்னிப்பதும் என ஓரு ஃபார்முலாவை ராடன் உருவாக்கியிரு்கிறது. இதில் கெட்டவர்கள் அவர்கள் நினைத்ததை கடைசி வரை சாதித்துக்கொள்கிறார்கள், போதாதைக்கு மன்னிப்பு வேறு கிடைத்து விடுகிறது. நல்லவர் கடைசி வரை அவமானப்பட்டுக்கொண்டும் போராடிக்கொண்டே இருக்க வேண்டியது தான். ஒருவேளை ராதிகாவின் வெற்றிக்கு காரணம் இது தானோ?
நல்ல காமெடி சீரியல்கள் தயாரிக்கலாமே! சின்ன பாப்பா பெரிய பாப்பா இல்லையா என கேட்காதீர்கள். இதை சின்ன குழந்தை முதல் ஏன் ஆண்கள் கூட ரசிக்கிறார்கள் என நான் கண்ட போது அதிர்ச்சியாயிருந்தது. இத்தொடர் முழுக்க மட்ட ரகமான சீண்டலும் அடுத்தவரை கேவலப்படுத்துவதுமே பிராதனமாயிருக்கிறது.)
ராடன் நிறுவனம் என தொடங்கி சீரியல்கள் என்று மட்டுமில்லாமல் கேம் சோக்கள், சினிமா, தொலைக்காட்சிக்கான சினமா, மற்ற நாடுகளில் உள்ள தமிழ் சானல்களிலும் நிகழ்ச்சி என வேர் பரப்பியிருக்கிறது. ராடன் இன்னும் வித்தியாசமான முயற்சியிலும் நல்ல நிகழ்ச்சிகளிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என ஆசையாய் இருக்கிறது.
ராடன் பங்குகள் சந்தையிலும் இருக்கிறது. இப்பொழுது இல்லையென்றாலும் ராடன் சீக்கிரமே வடக்கே ஏக்தா கபூரின் பாலாஜி பிலிம்ஸ் போல பெரிதாக ஒரு நாள் தங்கப்புதையலாக மாறும். வேட்டைக்கு ரெடிராயாயிருங்க.
நீங்கள் சொன்னது: (3)
ராடான் ஏற்கெனவே பங்குகளை வெளியிட்டு பங்குச்சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. அதன் ரூ. 2 முகமதிப்பு உள்ள பங்குகளில் இன்றைய விலை ரூ. 6.70. அதிகபட்சமாக கடந்த ஒரு வருடத்தில் ரூ. 19.45 வரை சென்றுள்ளது.
கடந்த நிதியாண்டில் ராடானின் மொத்த வருமானம் - ரூ. 31.22 கோடிகள். நிகர லாபம் - ரூ. 1.75 கோடிகள்.
பாலாஜி டெலிஃபில்ம்ஸ் நிறுவனத்துடன் இப்போதைக்கு ராடான் நிறுவனத்தை ஒப்பிடவே முடியாது. பாலாஜியின் சென்ற நிதியாண்டு வருமானம் - 196.75 கோடிகள். நிகர லாபம் - ரூ. 62.37 கோடிகள். அதன் ரூ. 2 முகமதிப்பு உள்ள பங்கின் இன்றைய விலை ரூ. 167.25.
பத்ரி உங்கள் தகவலுக்கு நன்றி. பாலாஜிக்கு இருக்கும் உலக சந்தை ராடனுக்கு கிடைக்கும் வாய்ப்பு இல்லை. ராடனுக்கு இருக்கும் மற்றொரு சிக்கல் அவர்கள் தங்களை சன் குழுமத்துடன் மட்டுமே அடையாளப்படுத்திக் கொண்டிருப்பது. அதனால் ராடனை வணிக ரீதியில் பாலாஜிக்கு நிகராக ஒப்பிடவில்லை.
உங்கள் புள்ளிவிவரம் உதவியாய் இருக்ககிறது. 19.45லிருந்து ஏன் 6.70 ஆக சரிந்துவிட்டது?
பங்கு விலைகள் ஏறுவதும் இறங்குவதும் இயல்பே. ராடான் பட்டியலிடப்பட்டபோது அதன் விலை மேலே போயிருக்கலாம். அதற்குப் பிறகு செய்தித்தாள்களில் எங்குமே பெயர் அடிபடாமல், பெரிதாக எதுவுமே செய்யாமல் இருப்பது ராடானின் பலவீனம். அதனால் பங்குகளை போட்டி போட்டுக்கொண்டு யாரும் வாங்குவது இல்லை. வாங்க யாரும் போட்டி போடாததால் அந்தப் பங்கின் விலை கீழேயே உள்ளது.
தொடர்ச்சியாக வருமானமும் லாபமும் ஏற ஏற பங்கின் விலை மேலே போக சாத்தியங்கள் உள்ளன.
Post a Comment
<< முகப்பு