அ முதல் ஃ வரை

நான் படித்தது, பார்த்தது, என்னை பாதித்தது என எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள...

Thursday, March 30, 2006

சித்திரம் பேசுதடி - திரை விமர்சனம்

ரவுடியை காதலிக்கும் வழக்கமான தமிழ் சினிமா தான். ஆனாலும் வித்தியாசமாய் யோசித்திருக்கிறார்கள். (இயக்குனர் மிஷ்கின் அஜீத்திடம் கதை சொன்னாரா தெரியவில்லை!)

நரேனும், பாவனா (ஸவ்பனக்கூடு என்ற மலையாள படத்தில் மீரா ஜாஸ்மினின் தங்கையாக வருபவர்) என்ற மலையாள வரவானவரும் படத்தில் நடித்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவை பொருத்தவரை அறிமுகங்கள் தான்.

தாதா என்றால் டாடா சுமாவிலும் ஆட்டோவிலும் வருவார்கள் என அப்பாவியாய் நம்பிக்கொண்டிருக்கையில் (உபயம்: தமிழ் சினிமா தான்!) உங்கள் பக்கத்து வீட்டில் வாழை மண்டி வைத்திருப்பவர் கூட தாதாவக இருக்கக்கூடும் என பயமுறுத்துகிறார்கள். வாழை மண்டி நடத்திக்கொண்டு போன் மூலமாக உத்தரவு பெற்றுக்கொண்டு இதோ செஞ்சிறேன் முடிச்சிறேன் என ஒரு பாத்திரம். இவரை வில்லன் என்று சொல்ல முடியாது.
வேலையில்லாமல் இருந்தவர் அடியாளாக மாறிவிடும் நேரத்தில் காதல் பூக்கிறது. உடனே திருந்தி பொம்மை விற்கப்போகிறார். திருமணம் நிச்சயமாகிறது. ஏடாகூடாமன இடத்தில் ஹீரோவை பார்க்கும் காதலி திருமணத்தை நிறுத்திவிடுகிறார். பின்னர் என்ன நடக்கிறது என்பது இடைவேளைக்கு பிறகு வருகிறது.

சாவடிச்சிருவேன் என எதுக்கெடுத்தாலும் கத்தும் நரேன் தமிழுக்கு புதுசு. (இந்த படத்திற்கு பிறகு குணச்சித்திரமாக நடிக்க வேண்டியது தான். கதைக்கு பொருந்துகிறார். அவ்வளவே!) பாவனாவிடம் எதிர்பாராமல் திட்டுவாங்கிவிட்டு வீட்டில் வந்து சாவடிச்சிருவேன் என மிரட்டும்போது தியேட்டர் அதிருகிறது.
ஹோட்டலில் நரேனின் நண்பர்கள் செய்யும் அலப்பறையும் சிரிக்க வைக்கிறது. இயல்பான நகைச்சுவை.

அடியாள்கள் என்றைக்குமே அடியாள்கள் தான். லீடர் எப்பவுமே பணத்தை கொடுத்துவிட்டு அப்புறம் என போய்விடுவான் என நிதர்சனத்தை உணர்த்தும் வசனங்களும் அருமை. (அப்படின்னா நமக்கு நாமே முதலாளி தான் சரிப்படும் போல என கிளம்பிறப்போராங்க!)

வெளிர் நிறமாக உடையணிந்துகொண்டு பிளாஸ்டிக் தோடுகளோடு துடுக்காய் வரும் பாவனா நதியாவை ஞாபகப்படுத்துகிறார். நடிக்கவும் செய்கிறார். (மலையாள பெண்களில் வரவான தமிழ் சினிமாவில் நாயகிகளுக்கும் அழுத்தமான நடிக்க வாய்ப்பிருக்ககூடிய பாத்திரங்கள்
உருவாக்கபடுகின்றன. அதற்காகவே அவர்களுக்கு ஒரு சல்யூட்!) நரேனுடன் மல்லுக்கு நிற்கும்போதும் பின்னர் அப்பாவிடம் சண்டை போடும் போது என பாவனா படம் முழுக்க நன்றாய் செய்திருக்கிறார்.

ரவுடி நரேனுக்கு பாவனாவுடன் காதல் மலர்ந்தவுடன் ஒரு பாடலில் எல்லாமே பின்னோக்கி நகர்வதாக எடுத்திருக்கிறார்கள். ரவுடி திருந்தி தன்னுடைய பழைய வாழ்க்கைக்கு ஆசைப்படுவதாக இயக்குனர் காட்ட விரும்பியிருக்கிறார். (கெளம்பிட்டாங்கய்யா, கெளம்பிட்டாங்கய்யா! அவர் யோசிக்காததெல்லாம் சொல்லி அப்படி இப்படி தூக்கிவிடாதீங்க.
எடிட்டிங்கில் சும்மா ரீவைண்ட் பண்ணறதெல்லாம் முத்திரையா?)

சும்மா தலையை குனிந்து கொண்டு 50 பேரில் ஒவ்வொருவராய் வந்து அடி வாங்கிச் செல்லும் காட்சி சூப்பர். அடுத்து என்ன செய்யப்போரானோ என அவர்கள் குழம்பி நிற்கையில் ஒரு போடு போடுகிறார். (என்ன டெக்னிக்கோ?)

"கானா" உலகநாதன் புதுசு. இனி ஒரு 100 படங்களில் அவரின் கானா கேட்கலாம். அவர் போட்டிருக்கும் மஞ்சள் காஸ்ட்யூமூக்கு ஒரு பிளாஸ்பேக் வேறு. (மிஷ்கின் இது ஓவருன்னா!. இந்த மஞ்சள் உங்களுக்கு வேறு எதை ஞாபகப்படுத்துகிறது?)

மாளவிகாவின் குத்தாட்டமும் அந்த கேமிரா கோணங்களும் சிலை போல காணாவின் அசைவுகளும் ஏற்கனவே உலகத்தொலைக்காட்சிகளிலும் எப்.எம் ரேடியாக்களிலும் (பல) முறையாக பரபரப்பாயிருக்கிறது. (தியேட்டரில் ஒருவர் இது தான் ஹைலைட்டு என சவுண்டுவிட இன்னொருவர் என்ன லைட்டே இல்லே என பார்திப-வடிவேலு குண்டக்க மண்டக்க காமெடி
பண்ணிக்கொண்டிருந்தார்கள்)

டைட்டில் கார்டில் "காதல்", "பிதாமகன்", "அலைபாயுதே" என அடைமொழியோடு மூன்று பெயர்கள் போட்டார்கள். அவர்கள் எல்லாம் அப்பட புகழ் அப்பாக்கள் என படம் பார்க்கும் போது தான் புரிந்தது.

காதல் எனும் தென்றல் ரவுடியின் வாழ்வில் வந்தால் அது புயலாய் புரட்டிவிடும் என மெஸேஜ் சொல்கிறார்களோ? ஹீரோ நல்லவன் என்பதால் நாம் எதிர்பார்த்தபடி ஒரு சுபம் போடுகிறார்கள். மழை கிளைமாக்சும் வித்தியாசமாய் இருக்கிறது. பாவனா இயல்பாய் தடுக்கி விழுவது கூட
நன்றாய் இருக்கிறது. இங்கே இன்னொரு காதல் பூக்கிறது. அந்த தோழி நன்றாக வெட்கப்படுகிறார்.

இந்த படத்திலும் வெளிநாட்டு டூயட்டுகள் இல்லை. ஊட்டியிலேயே அதுவும் ஒரே இடத்திலேயே இரண்டு பாட்டு வருகிறது. "வாலை மீனும்.." என்ற கானாவை தவிர இன்னும் இரண்டு பாட்டுகள் மெலடியாய் கேட்க நன்றாக இருக்கிறது. சுந்தர் சி பாபு என்ற இசை இயக்குனரும்
திரைக்கதைகேற்ப இசையமைத்திருக்கிறார்.

உங்கள் மஜாவோடு கும்பலாக போய் படத்தை என்ஜாய் பண்ணுங்க தோழர்களே!

நீங்கள் சொன்னது: (0)

Post a Comment

<< முகப்பு