ஜெயா டி.வியில் தற்பொழுது தான் வைகோவின் நேர்முகம் (மறு?)ஒளிப்பரப்பாகி முடிந்திருக்கிறது.
கூட்டணி ஒப்பந்தம் முடிவாகி போயஸ் தோட்ட வாசலில் தோன்றிய வைகோ பெரும் சங்கடப்பட்டார் என கழுகு (ஜீ.வி) முதற்கொண்டு அதை டி.வியில் கண்டவர்கள் சொன்னார்கள். ஆனால் இந்த பேட்டியை கண்ட பொழுது வைகோவிற்கு அப்படி ஒரு சங்கடம் இருப்பதாக தோன்றவில்லை. சொல்லப்போனால் இயல்பாக ஓய்வாக பேசினார்.
பேட்டி கண்ட ரபிபெர்ணார்ட் மிக சாமார்த்தியமாக மக்களுக்கு தோன்றக்கூடிய நெருடல்களை கேள்வியாக்கிவிட்டார்
உதாரணத்துக்கு:
1) 2004 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்தவர்கள் எப்படி இரண்டு ஆண்டுகளுக்குள் மாற்றி போடுவார்கள் என நினைக்கிறீர்கள்?
2) ஈழ பிரச்சிணையில் உங்களுக்கும் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கும் வேறுபாடு இருக்கிறதே?
இந்த கேள்விக்கு பதிலளிக்கையில் ஜெ இலங்கை பிரதமர் சந்திப்பை தவிர்த்ததை சொன்னார். உண்மையில் அது முதல் சிக்னல் என அப்போதே பேசப்பட்டது. மாறிவிட்ட சூழ்நிலையில் போர் அபாய நிலையில் ஜெவின் ஈழ நிலைப்பாடு இதுவென உலக தமிழர்களுக்காக சிக்னல் என பொதுவாக குறிப்பிட்டார்.
வைகோ ஜெவின் சாதனைகளை பட்டியலிட்டார். அவை உண்மையானவையும் கூட. ஆனால் கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் காளிமுத்து பேசுகிறாரோ என நாம் சந்தேகப்படுமளவிற்கு உற்சாகமாக குறிப்பிட்டார்.
அந்த பட்டியல்:
1) ஆசிரியர் மாற்ற உத்தரவு தொடர்பான அரசியல் கலப்பற்ற கவுன்சிலிங்
2) சுனாமி நிவாரணம்
3) இலவச சைக்கிள்
4) உழவர் பாதுகாப்பு சட்டம்
5) மகளிர் சுய உதவிக்குழுக்கள்
இவை உண்மைதான் என்பவர்கள் கண்டவர்கள் அறிவார்கள். மகாமக திருவிழாவின் போது கும்பகோணத்தில் எவ்வாறு முழு ஏற்பாடு (ஏற்கனவே கற்ற பாடம் அப்படி) செய்தார்கள் என்பதை மக்கள் ஒப்புக்கொள்வார்கள். அந்த ஏற்பாடு அதே கும்பகோணத்தில் பள்ளி தீப்பிடித்து எறிந்த பிறகு சிகிச்சையில் அவசர நிலையில் பணியாற்ற அந்த பகுதி மருத்தவமனைகள் சிறப்பாக செயல்பட்டதையும் பாராட்ட வேண்டும்.
ரபி குறைவாகவே கேள்வி கேட்டார். எதிராளி பேசுகிற பொழுது நீங்கள் அமைதியாய் இருந்தால் எதிராளி அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக இன்னும் பேசுவார். தன் கூட்டணி செயலை நியாயபடுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள வைகோவிடமும் ரபி அமைதியாக இருந்தார். (எடிட்டிங்கில் கட் செய்திருப்பார்களோ?). வைகோ நிறையவே பேசினார். சன் டிவி, ராஜ் டிவி, மாறன், தினகரன், குங்குமம், சுமங்கலி விஷன், கேபிள் மசோதா என.. பார்த்தவர்களுக்கு அவை பொய்யில்லை என புரிந்திருக்கும். (ஆனால் ஊடே அமெரிக்கா போன்ற நாடுகளில் உற்பத்தி விலையை விட குறைவாக விற்று மற்ற நிறுவனங்களை நஷ்டம் அடைய சட்டம் அனுமதிக்காது என்று குறிப்பிட்டார். தினகரன் ஒரு ரூபாயில் விற்பதை தான் சொன்னார். ஆனால் சமீபத்தில் வால்மார்ட் பற்றி நான் படித்த ஒரு புத்தகத்தில் வால்மார்ட் எப்படி ஒரு ஊறுகாய் கம்பெனியை குறைந்த விலையில் அதிக எடையுள்ள ஊறுகாய் ஜார்களை சப்ளை செய்ய கடுமை காட்டி அந்த கம்பெனி மஞ்சள் கடுதாசி (bankruptcy) கொடுக்கும் நிலைக்கு தள்ளியது என சுட்டிகாட்டப்பட்டிருந்தது.)
ஜெயாவில் பணிபுரியும் ரபி கூட செல்வி ஜெயலலிதா என பேசுகையில் வைகோவோ மாண்புமிகு டாக்டர் புரட்சிதலைவி என மரியாதை காட்டினார். ஜெ என்ன மாயம்மய்யா கையில் வைத்திருக்கிறார்? வெளியில் புலி எல்லாம் அம்மா பக்கம் வந்தவுடன் வீட்ல எலியாகி விடுகிறார்கள்.
இந்நிலையில் ஜெவிற்கு ஒரு சிறந்த பேச்சாளர் கிடைத்திருக்கிறார். வைகோ தன் நிலைப்பாடு பற்றி சமாதனாம் செய்யவே நிறைய நேரம் செலவிட வேண்டும் என பலர் நினைக்கிறார்கள். அதற்கு தேவைப்படாது எனவே நான் நினைக்கிறேன்.
காலச்சக்கரம் தான் என்ன பாடுபடுத்துகிறது. சமீபத்திய நிகழ்வான சோனியாவின் "office of profit" ராஜினாமாவை ஜெ நாடகம் என சாடியிருக்கிறார். மத்தியில் இன்னும் இருக்கும் வைகோ என்ன சொல்வார்? 40 எம்பிக்களும் ராஜினாமா செய்துவிட்டால் மத்திய ஆட்சியே கவிழும் நிலையில் மறு தேர்தல் வந்துவிட்டால் ஜெவின் இத்தாலி நிலைப்பாட்டிற்கு வைகோ என்ன சமாதானம் சொல்வார்?
காலத்தின் தீர்ப்பு! (இதை விட politically correct பதில் என்னவாக இருந்துவிட முடியும்)