அ முதல் ஃ வரை

நான் படித்தது, பார்த்தது, என்னை பாதித்தது என எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள...

Friday, March 31, 2006

"சோனியா" காந்தியாகிறார்(?!)


தலைப்பு சரி தானுங்கோ!

இந்த வார விகடனில் "office of profit" பற்றி தான் தலையங்கமே. ஆனாலும் தங்களுக்கே உரிய தன்னடக்கத்துடன் எல்லாரையும் வாரி எழுதியருக்கிறார்கள்.

ஆனாலும் மதன் அந்த குறையை போக்கி தனி கார்ட்டூனே வரைந்திருக்கிறார். அந்த கார்ட்டூன் தான் நீங்கள் பார்ப்பது.

தலையங்கத்தின் ஒரு பகுதியிது:

ஜெயா பச்சன் நீக்கத்தை தொடர்ந்து சோனியா காந்தி மீது கணைகள், நாடாளுமன்றம் மறு தேதியின்றி ஒத்திவைப்பு, அவசரச்சட்டத் திருத்தம் வருமென்ற பரபரப்பு. 'எமர்ஜென்ஸி மனப்பான்மை' என்று எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு. சோனியாவின் திடீர் ராஜினாமா. 'இது நாடகம்' என்ற கோஷங்கள். இப்போது சட்டத் திருத்தத்துக்கு முதல் கட்ட உடன்பாடு! கிட்டத்தட்ட ஒரே வாரத்துக்குள் இத்தனை அந்தர்பல்டி அதிசயங்களையும் நடத்தி காட்டியிருக்கிறார்கள நம் பிரதிநிதிகள்

நன்றி: ஆனந்த விகடன்

Thursday, March 30, 2006

சித்திரம் பேசுதடி - திரை விமர்சனம்

ரவுடியை காதலிக்கும் வழக்கமான தமிழ் சினிமா தான். ஆனாலும் வித்தியாசமாய் யோசித்திருக்கிறார்கள். (இயக்குனர் மிஷ்கின் அஜீத்திடம் கதை சொன்னாரா தெரியவில்லை!)

நரேனும், பாவனா (ஸவ்பனக்கூடு என்ற மலையாள படத்தில் மீரா ஜாஸ்மினின் தங்கையாக வருபவர்) என்ற மலையாள வரவானவரும் படத்தில் நடித்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவை பொருத்தவரை அறிமுகங்கள் தான்.

தாதா என்றால் டாடா சுமாவிலும் ஆட்டோவிலும் வருவார்கள் என அப்பாவியாய் நம்பிக்கொண்டிருக்கையில் (உபயம்: தமிழ் சினிமா தான்!) உங்கள் பக்கத்து வீட்டில் வாழை மண்டி வைத்திருப்பவர் கூட தாதாவக இருக்கக்கூடும் என பயமுறுத்துகிறார்கள். வாழை மண்டி நடத்திக்கொண்டு போன் மூலமாக உத்தரவு பெற்றுக்கொண்டு இதோ செஞ்சிறேன் முடிச்சிறேன் என ஒரு பாத்திரம். இவரை வில்லன் என்று சொல்ல முடியாது.
வேலையில்லாமல் இருந்தவர் அடியாளாக மாறிவிடும் நேரத்தில் காதல் பூக்கிறது. உடனே திருந்தி பொம்மை விற்கப்போகிறார். திருமணம் நிச்சயமாகிறது. ஏடாகூடாமன இடத்தில் ஹீரோவை பார்க்கும் காதலி திருமணத்தை நிறுத்திவிடுகிறார். பின்னர் என்ன நடக்கிறது என்பது இடைவேளைக்கு பிறகு வருகிறது.

சாவடிச்சிருவேன் என எதுக்கெடுத்தாலும் கத்தும் நரேன் தமிழுக்கு புதுசு. (இந்த படத்திற்கு பிறகு குணச்சித்திரமாக நடிக்க வேண்டியது தான். கதைக்கு பொருந்துகிறார். அவ்வளவே!) பாவனாவிடம் எதிர்பாராமல் திட்டுவாங்கிவிட்டு வீட்டில் வந்து சாவடிச்சிருவேன் என மிரட்டும்போது தியேட்டர் அதிருகிறது.
ஹோட்டலில் நரேனின் நண்பர்கள் செய்யும் அலப்பறையும் சிரிக்க வைக்கிறது. இயல்பான நகைச்சுவை.

அடியாள்கள் என்றைக்குமே அடியாள்கள் தான். லீடர் எப்பவுமே பணத்தை கொடுத்துவிட்டு அப்புறம் என போய்விடுவான் என நிதர்சனத்தை உணர்த்தும் வசனங்களும் அருமை. (அப்படின்னா நமக்கு நாமே முதலாளி தான் சரிப்படும் போல என கிளம்பிறப்போராங்க!)

வெளிர் நிறமாக உடையணிந்துகொண்டு பிளாஸ்டிக் தோடுகளோடு துடுக்காய் வரும் பாவனா நதியாவை ஞாபகப்படுத்துகிறார். நடிக்கவும் செய்கிறார். (மலையாள பெண்களில் வரவான தமிழ் சினிமாவில் நாயகிகளுக்கும் அழுத்தமான நடிக்க வாய்ப்பிருக்ககூடிய பாத்திரங்கள்
உருவாக்கபடுகின்றன. அதற்காகவே அவர்களுக்கு ஒரு சல்யூட்!) நரேனுடன் மல்லுக்கு நிற்கும்போதும் பின்னர் அப்பாவிடம் சண்டை போடும் போது என பாவனா படம் முழுக்க நன்றாய் செய்திருக்கிறார்.

ரவுடி நரேனுக்கு பாவனாவுடன் காதல் மலர்ந்தவுடன் ஒரு பாடலில் எல்லாமே பின்னோக்கி நகர்வதாக எடுத்திருக்கிறார்கள். ரவுடி திருந்தி தன்னுடைய பழைய வாழ்க்கைக்கு ஆசைப்படுவதாக இயக்குனர் காட்ட விரும்பியிருக்கிறார். (கெளம்பிட்டாங்கய்யா, கெளம்பிட்டாங்கய்யா! அவர் யோசிக்காததெல்லாம் சொல்லி அப்படி இப்படி தூக்கிவிடாதீங்க.
எடிட்டிங்கில் சும்மா ரீவைண்ட் பண்ணறதெல்லாம் முத்திரையா?)

சும்மா தலையை குனிந்து கொண்டு 50 பேரில் ஒவ்வொருவராய் வந்து அடி வாங்கிச் செல்லும் காட்சி சூப்பர். அடுத்து என்ன செய்யப்போரானோ என அவர்கள் குழம்பி நிற்கையில் ஒரு போடு போடுகிறார். (என்ன டெக்னிக்கோ?)

"கானா" உலகநாதன் புதுசு. இனி ஒரு 100 படங்களில் அவரின் கானா கேட்கலாம். அவர் போட்டிருக்கும் மஞ்சள் காஸ்ட்யூமூக்கு ஒரு பிளாஸ்பேக் வேறு. (மிஷ்கின் இது ஓவருன்னா!. இந்த மஞ்சள் உங்களுக்கு வேறு எதை ஞாபகப்படுத்துகிறது?)

மாளவிகாவின் குத்தாட்டமும் அந்த கேமிரா கோணங்களும் சிலை போல காணாவின் அசைவுகளும் ஏற்கனவே உலகத்தொலைக்காட்சிகளிலும் எப்.எம் ரேடியாக்களிலும் (பல) முறையாக பரபரப்பாயிருக்கிறது. (தியேட்டரில் ஒருவர் இது தான் ஹைலைட்டு என சவுண்டுவிட இன்னொருவர் என்ன லைட்டே இல்லே என பார்திப-வடிவேலு குண்டக்க மண்டக்க காமெடி
பண்ணிக்கொண்டிருந்தார்கள்)

டைட்டில் கார்டில் "காதல்", "பிதாமகன்", "அலைபாயுதே" என அடைமொழியோடு மூன்று பெயர்கள் போட்டார்கள். அவர்கள் எல்லாம் அப்பட புகழ் அப்பாக்கள் என படம் பார்க்கும் போது தான் புரிந்தது.

காதல் எனும் தென்றல் ரவுடியின் வாழ்வில் வந்தால் அது புயலாய் புரட்டிவிடும் என மெஸேஜ் சொல்கிறார்களோ? ஹீரோ நல்லவன் என்பதால் நாம் எதிர்பார்த்தபடி ஒரு சுபம் போடுகிறார்கள். மழை கிளைமாக்சும் வித்தியாசமாய் இருக்கிறது. பாவனா இயல்பாய் தடுக்கி விழுவது கூட
நன்றாய் இருக்கிறது. இங்கே இன்னொரு காதல் பூக்கிறது. அந்த தோழி நன்றாக வெட்கப்படுகிறார்.

இந்த படத்திலும் வெளிநாட்டு டூயட்டுகள் இல்லை. ஊட்டியிலேயே அதுவும் ஒரே இடத்திலேயே இரண்டு பாட்டு வருகிறது. "வாலை மீனும்.." என்ற கானாவை தவிர இன்னும் இரண்டு பாட்டுகள் மெலடியாய் கேட்க நன்றாக இருக்கிறது. சுந்தர் சி பாபு என்ற இசை இயக்குனரும்
திரைக்கதைகேற்ப இசையமைத்திருக்கிறார்.

உங்கள் மஜாவோடு கும்பலாக போய் படத்தை என்ஜாய் பண்ணுங்க தோழர்களே!

திமிங்கலம் யாருங்கோ?

சித்திரம் பேசுதடி படம் வெளிவந்து "கானா" உலகநாதனை பட்டி தொட்டியெல்லம் பிரபலமடைடைய வைத்த வாலை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் பாடலை எடுத்துக்கொண்டு விகடன் நையாண்டியில் கலக்கி விட்டார்கள்.

கலைஞர் விரலை நீட்டிய படி சிலை போல பாடுவதையும், அம்மா குதிரையில் பின்புறம் திரும்பி உட்கார்ந்து கொண்டு ரகளை பண்ணுவதான கற்பனையும் சும்மா நச் ரகம். படங்கள் வரைந்த ஹரனுக்கு ஒரு ஓ.


அதோடு அம்மாவை திமிங்கலம் என சோடா குடித்துவிட்டு திருமா வர்ணிப்பது செம சிரிப்பை
வரவழைத்தது.

35 வாங்கிக் கிட்டு வைகோ ஆடி வர்றார் நாட்டியம்
திருமாவோட சந்தானமும் எடுத்து வர்றார் வாத்தியம்
அள்ளி அள்ளி அள்ளித் தந்த
அல்லிராணி யாருங்கோ?
....என நிறுத்துகிறார்.

பின்னர்கோலி சோடா குடித்துவிட்டு....

திமிங்கலம் அம்மா தானுங்கோ!


மிச்சத்துக்கு கடந்த வார விகடனை படியுங்கள்.

Saturday, March 25, 2006

ஜெயாவில் வைகோவின் நேர்முகம் - பகுதி 2

ஜெயா டி.வியில் தற்பொழுது தான் வைகோவின் நேர்முகம் (மறு?)ஒளிப்பரப்பாகி முடிந்திருக்கிறது.

கூட்டணி ஒப்பந்தம் முடிவாகி போயஸ் தோட்ட வாசலில் தோன்றிய வைகோ பெரும் சங்கடப்பட்டார் என கழுகு (ஜீ.வி) முதற்கொண்டு அதை டி.வியில் கண்டவர்கள் சொன்னார்கள். ஆனால் இந்த பேட்டியை கண்ட பொழுது வைகோவிற்கு அப்படி ஒரு சங்கடம் இருப்பதாக தோன்றவில்லை. சொல்லப்போனால் இயல்பாக ஓய்வாக பேசினார்.

பேட்டி கண்ட ரபிபெர்ணார்ட் மிக சாமார்த்தியமாக மக்களுக்கு தோன்றக்கூடிய நெருடல்களை கேள்வியாக்கிவிட்டார்

உதாரணத்துக்கு:
1) 2004 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்தவர்கள் எப்படி இரண்டு ஆண்டுகளுக்குள் மாற்றி போடுவார்கள் என நினைக்கிறீர்கள்?
2) ஈழ பிரச்சிணையில் உங்களுக்கும் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கும் வேறுபாடு இருக்கிறதே?
இந்த கேள்விக்கு பதிலளிக்கையில் ஜெ இலங்கை பிரதமர் சந்திப்பை தவிர்த்ததை சொன்னார். உண்மையில் அது முதல் சிக்னல் என அப்போதே பேசப்பட்டது. மாறிவிட்ட சூழ்நிலையில் போர் அபாய நிலையில் ஜெவின் ஈழ நிலைப்பாடு இதுவென உலக தமிழர்களுக்காக சிக்னல் என பொதுவாக குறிப்பிட்டார்.

வைகோ ஜெவின் சாதனைகளை பட்டியலிட்டார். அவை உண்மையானவையும் கூட. ஆனால் கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் காளிமுத்து பேசுகிறாரோ என நாம் சந்தேகப்படுமளவிற்கு உற்சாகமாக குறிப்பிட்டார்.
அந்த பட்டியல்:
1) ஆசிரியர் மாற்ற உத்தரவு தொடர்பான அரசியல் கலப்பற்ற கவுன்சிலிங்
2) சுனாமி நிவாரணம்
3) இலவச சைக்கிள்
4) உழவர் பாதுகாப்பு சட்டம்
5) மகளிர் சுய உதவிக்குழுக்கள்
இவை உண்மைதான் என்பவர்கள் கண்டவர்கள் அறிவார்கள். மகாமக திருவிழாவின் போது கும்பகோணத்தில் எவ்வாறு முழு ஏற்பாடு (ஏற்கனவே கற்ற பாடம் அப்படி) செய்தார்கள் என்பதை மக்கள் ஒப்புக்கொள்வார்கள். அந்த ஏற்பாடு அதே கும்பகோணத்தில் பள்ளி தீப்பிடித்து எறிந்த பிறகு சிகிச்சையில் அவசர நிலையில் பணியாற்ற அந்த பகுதி மருத்தவமனைகள் சிறப்பாக செயல்பட்டதையும் பாராட்ட வேண்டும்.

ரபி குறைவாகவே கேள்வி கேட்டார். எதிராளி பேசுகிற பொழுது நீங்கள் அமைதியாய் இருந்தால் எதிராளி அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக இன்னும் பேசுவார். தன் கூட்டணி செயலை நியாயபடுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள வைகோவிடமும் ரபி அமைதியாக இருந்தார். (எடிட்டிங்கில் கட் செய்திருப்பார்களோ?). வைகோ நிறையவே பேசினார். சன் டிவி, ராஜ் டிவி, மாறன், தினகரன், குங்குமம், சுமங்கலி விஷன், கேபிள் மசோதா என.. பார்த்தவர்களுக்கு அவை பொய்யில்லை என புரிந்திருக்கும். (ஆனால் ஊடே அமெரிக்கா போன்ற நாடுகளில் உற்பத்தி விலையை விட குறைவாக விற்று மற்ற நிறுவனங்களை நஷ்டம் அடைய சட்டம் அனுமதிக்காது என்று குறிப்பிட்டார். தினகரன் ஒரு ரூபாயில் விற்பதை தான் சொன்னார். ஆனால் சமீபத்தில் வால்மார்ட் பற்றி நான் படித்த ஒரு புத்தகத்தில் வால்மார்ட் எப்படி ஒரு ஊறுகாய் கம்பெனியை குறைந்த விலையில் அதிக எடையுள்ள ஊறுகாய் ஜார்களை சப்ளை செய்ய கடுமை காட்டி அந்த கம்பெனி மஞ்சள் கடுதாசி (bankruptcy) கொடுக்கும் நிலைக்கு தள்ளியது என சுட்டிகாட்டப்பட்டிருந்தது.)

ஜெயாவில் பணிபுரியும் ரபி கூட செல்வி ஜெயலலிதா என பேசுகையில் வைகோவோ மாண்புமிகு டாக்டர் புரட்சிதலைவி என மரியாதை காட்டினார். ஜெ என்ன மாயம்மய்யா கையில் வைத்திருக்கிறார்? வெளியில் புலி எல்லாம் அம்மா பக்கம் வந்தவுடன் வீட்ல எலியாகி விடுகிறார்கள்.

இந்நிலையில் ஜெவிற்கு ஒரு சிறந்த பேச்சாளர் கிடைத்திருக்கிறார். வைகோ தன் நிலைப்பாடு பற்றி சமாதனாம் செய்யவே நிறைய நேரம் செலவிட வேண்டும் என பலர் நினைக்கிறார்கள். அதற்கு தேவைப்படாது எனவே நான் நினைக்கிறேன்.

காலச்சக்கரம் தான் என்ன பாடுபடுத்துகிறது. சமீபத்திய நிகழ்வான சோனியாவின் "office of profit" ராஜினாமாவை ஜெ நாடகம் என சாடியிருக்கிறார். மத்தியில் இன்னும் இருக்கும் வைகோ என்ன சொல்வார்? 40 எம்பிக்களும் ராஜினாமா செய்துவிட்டால் மத்திய ஆட்சியே கவிழும் நிலையில் மறு தேர்தல் வந்துவிட்டால் ஜெவின் இத்தாலி நிலைப்பாட்டிற்கு வைகோ என்ன சமாதானம் சொல்வார்?

காலத்தின் தீர்ப்பு! (இதை விட politically correct பதில் என்னவாக இருந்துவிட முடியும்)

Friday, March 24, 2006

கணவர்களே, அண்ணன்மார்களே உஷார்.

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என சொல்லி மக்கள் ஏற்கனவே நகை கடைகளை ஸதம்பிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தங்கமோ இறக்கை கட்டிக்கொண்டு விலையேறிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் வாங்கும் தங்கம் குட்டி போடும் என்ற மந்திரத்தால் மோகமோ ஆர்வமோ மக்களிடம் குறையவில்லை.

இந்நேரத்தில் வெள்ளை தங்கம் மட்டும் சும்மா இருக்க முடியுமா. தங்கத்தை விட விலை கூடுதலாக இருப்பதாலும் சேட்டுக் கடையில் அடமானம் வைக்க முடியாது என்பதாலும் வசதியானவர்களும் பேஷன் ஆர்வலர்களும் மட்டுமே வாங்கி கொண்டிருந்தார்கள்.

அதனால் ஒரு தந்திரம் கண்டு பிடித்திருக்கிறார்கள். கடந்த வார 81-ஆம் ஆண்டு சிறப்பிதழான ஆனந்த விகடனில் குமுதம் ஜோதிடம் ஆசிரியர் (காழியூர் நாரயணனைக்கொண்டு ) பிளாட்டினமும் அட்சய திருதியை அன்று வாங்கினால் சுகம் கூடும் ஆரோக்கியம் கூடும் பணம் பன் மடங்காகும் என விளம்பர படுத்தியிருக்கிறார்கள்.

ஓரு புத்தகத்தில் படித்தேன். வங்கிகள் ஒரு சொத்து வாங்குங்கள் என வீட்டு கடன் திட்டத்தை நம்மிடம் விற்கிறார்கள். உண்மையில் வங்கிகள் தான் தவணை என்ற பெயரில் தங்களுக்கான வருங்கால சொத்து சேர்க்கிறார்கள் என்று. உண்மை தானே. நாம் வாழ்கின்ற வீட்டில் சராசரியாக 30 வருடம் தான் கழிக்கிறோம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். பின் வீடு வாரிசுக்கோ அல்லது வேறு வகையில் மாறிவிடுகிறது. வங்கியோ தனக்கு ஒரு சொத்து சோர்த்துவிட்டது.

அது போல அட்சய திருதியையும் வியாபாரிகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதே நேரத்தில் அன்றைய தினத்தன்று தானம் செய்தால் புண்ணியம் பெருகும் என்றும் சொல்கிறார்கள். அதை யார் செய்கிறார்கள் என்று தான் தெரியவில்லை.

Thursday, March 23, 2006

ஜெயிக்கும் பட்டியல்

ஆர்யாவும் பரத்தும் தூள் பரத்துகிறார்கள். ஆர்யா அழகாக இருந்தாலும் அமுல் பேபி போல இல்லாமல் ஒரு தெரு ரவுடி போல பொருந்துகிறார்.

பரத் தான் ஆர்யாவுக்கு நடிப்பிலும் சீனியர் என வெளுத்து வாங்குகிறார்.

பூஜா அழகாக மட்டுமில்லாமல் திறமையுடன் ஜொலிக்கிறார். ஒரு நடுத்தர குடும்பத்து பெண்ணுக்கே உரிய கூச்சத்துடனும் அசட்டுத் தைரியத்துடனும் நடித்திருக்கிறார். பரத் பலூன்களை சுடுவதை கண்டு மிரளும்போதும் பின்னர் உண்மை தெரிந்தவுடன் காதலை மறக்க முடியாமல் உடைந்து அழும் போதும் தான் நல்ல நடிகை என நிருபிக்கிறார். தமிழ் சினிமா இவரை எப்படி வீணடிக்கப்போகிறதோ என கவலையாக இருக்கிறது.

பத்மபிரியா ஆர்யாவின் காதலுக்காக தவமாய் தவமிருக்கிறார். அந்த ஏமாற்றங்களை அழகாக வெளிப்படுத்துகிறார். நடிக்க மட்டுமல்ல தன்னால் கிறங்கவைக்கவும் முடியும் என தாவணி களைகிறார்.

நல்ல வேளையாக கூலிக்கு கொலை செய்பவர்களை மன்னவனே தென்னவனே என விளிக்கும் பாடல்கள் இல்லை.

கதை ஒன்றும் புதுசில்லை தான். பிதாமகன் கதையில் இருக்கிற டிராமவை எடுத்துவிட்டு படம் எடுத்திருக்கறார். விக்ரம் போல பரத்ததும் சூர்யாவை போன்று ஆர்யாவும் ரசிகாவை போல பத்மப்பிரியாவும் லைலாவை போன்று பூஜாவும் வார்க்கபட்டிருப்பது தேவ ரகசியம் இல்லை. ஆனாலும் காட்சியமைப்பில் ஒரு வேகம் காட்டியிருப்பதால் படம் பார்க்கும் போது இந்த ஒற்றுமை தெரியவில்லை.

இந்த கதை இப்படி முடிவது தான் நியாயம். அதை இயக்குநர் சரியாகவே செய்திருக்கிறார். இது நாயகர்களை நம்பாமல் கதையை நம்பினால் மட்டுமே சாத்தியம்.

கதையில் தேவையில்லாத முடிச்சுகள், வெளிநாட்டு டூயட்டுகள் என எதுவுமில்லை. மருந்துக்கு கூட காவல்துறை இல்லை. கொலை ஏன் எதற்கு என காரணங்கள் இல்லை. அவை முக்கியமல்ல என்பதாலும் நமக்கு அந்த குறையே ஏற்படுவதில்லை. நேர் கோட்டில் படம் விறுவிறுவென நம்மை கட்டிப்டபோட்டுவிடுகிறது. ஒவ்வொரு காட்சியும் கதாபாத்திரமும் பின்னால் வேறு வேலைக்கு காத்திருப்பது முன்னே உணர்த்தப்பட்டாலும் அவை பின்னர் வரும்போது ஆஹா என இருக்கிறது. உதாரணத்துக்கு சாமியிடம் வேலை கேட்கும் அந்த சர்வர். அழகிய தீயே படத்திற்கு பிறகு ஒரு நல்ல வாய்ப்பு அவருக்கு. (பெயர் தெரியவில்லை). சார்லி, சந்திரசேகர் வரிசையில் குணச்சித்திர நடிப்புக்கு ஒருவர் கிடைத்திருக்கிறார்.

யுவன் பிண்ணனியல் பின்னி எடுத்திருக்கிறார். ஆனால் ஏன் மன்மதன் படத்தில் வரும் காதல் வளர்த்தேன் ஆரம்ப இசைக்கோர்வையை எல்லா படங்களிலும் பயன் படுத்துகிறார் என புரியவில்லை.

அறிந்தும் அறியாமல் தந்த இயக்குனர் கண்டிப்பாக சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் இடம் பெறுவார். வாழ்த்துக்கள்!

படம் பார்த்த பிறகு எனக்குள் எழுந்த கேள்விகள்:

அனாதையாக இருந்தாலும் இருக்கிற ஒரே நண்பணும் போன பிறகு பலி வாங்க புறப்படுவது நியாயம் என்றாலும், காசு வாங்கிக்கொண்டு என்ன ஏது என்று அறியாமலேயே வெட்டி சாய்க்கும் போது இவர்களுக்கு அந்த உணர்வும் வலியும் எங்கே போகும்?

படம் பார்க்கும் அந்த கூலிகொலையாளிகள், கத்தி எடுத்தவன் மரணம் கத்தியில் என உணர்வார்களா ?
இல்லை!
இந்த தொழிலுக்கு காதல் கூடாது வெறும் சுகம் மட்டும் போதும் என விபரீதமாக தெளிவு கொள்வார்களா?

Monday, March 06, 2006

வைகோ வீழந்துவிட்டாரா?

எல்லோரும் ஏதோ இன்றைக்கு தான் புதிதாக வைகோ ஜெ.விடம் கூட்டணி வைத்துக்கொண்டதாக நினைத்து வைகோ தரமிழந்துவிட்டார் கருணாநிதிக்கு துரோகம் செய்துவிட்டார் என அலுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழகம் முழுதும் நடைபயணம் செய்துவிட்டு பாராளுமன்ற தேர்தலில் வாஜ்பாய்க்கு ஆதரவு என்று ஜெவிடம் தானே கூட்டணி வைத்துக்கொண்டார்.

அன்றைக்கும் நீங்கள் சொல்லும் ''அரசியலில் நேர்மை; கொள்கையில் உறுதி; பொது வாழ்வில் தூய்மை'' தானே மதிமுகவின் மந்திரச்சொல்.

ஒரு வகையில் கலைஞர் வெற்றிபெற்றுவி்ட்டார். கடந்த முறை திமுக மதிமுகவை வெளியேற்றிவிட்டது என குற்றம் சொன்னவர்கள் கூட இன்று வைகோ தவறு செய்துவிட்டார் என நினைக்கிறார்கள். இது! இது தானே கலைஞர் விரும்பியதும். ஆரம்பத்தில இருந்தே பாசம் காண்பித்து தான் வளைந்து கொடுக்கிறேன்; வைகோ தான் முடிவெடுக்கவேண்டும் என எல்லைக்கோடு வரை தள்ளிவிட்டுவிட்டார். வைகோ தான் குழம்புகிறார் குழப்புகிறார் என ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்திவிட்டார். இன்றைக்கு மக்கள் வைகோவின் முடிவை ஆதரிக்கப்போவதில்லை என அவர்கள் சார்பு மீடியாக்கள் தொடங்கிவிட்ட மாயை தொடர்ந்துகொண்டிருக்கின்றனர்.

வைகோவை தமிழக மக்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தான் பார்க்கின்றனர். அவர் முதல்வர் ஆக தேர்ந்தெடுக்கப்படுபவதும் நடக்க போவதில்லை. அதனால் இந்த கூட்டணி அவரின் தன்மானம், நற்பெயர் என எதையும் குலைக்க போவதில்லை. மக்களுக்கு தெரியாதா கூட்டணி என்பது ஒரு தேர்தல் ஒப்பந்தம் தான் என்பது.

அதோடு ஜெயை எல்லோரும் மமதை பிடித்தவராக ஆணவத்தின் ஊற்றாக இன்னும் நினைத்துக்கொண்டிருப்பது கொஞ்சம் அதிகம் தான். மீடியாக்கள் வெளிச்சத்திற்காக 1991-96 ஆட்சியில் கெட்டதையே காட்டியது. இன்றைக்கும் அது தான் நடக்கிறது. 1991-96ல் திணமணியில் இருந்த சுதாங்கன் இன்று எங்கேயிருக்கிறார். வளர்ப்பு மகன் திருமணத்தை வர்ணணையோடு சன் டிவியில் காட்டி மக்களின் மனங்களை மாற்றிய ரபி பெர்ணார்ட் இன்று எங்கே இருக்கிறார்? ஜெயா டிவியில். இன்னும் பட்டியலிடலாம்.

ஜெ கஷ்டப்பட்டு பாடம் படித்துக்கொண்டிருக்கிறார். 1997 தேர்தல் தோல்வி 2001 அவருக்கு பாடம் வழங்கியது. 2003 தேர்தல் இன்னொரு பாடம் வழங்கியது. மேம்போக்காக பார்ப்பவர்களுக்கு குற்றம் மட்டுமே கண்டுபிடிப்பவர்களுக்கு அது தெரிய வாய்ப்பில்லை. 2006ல் ஜெயித்தால் கண்டிப்பாக கடந்த கால தவறுகளை செய்ய மாட்டார். கொஞ்சம் முயற்ச்சித்தால் நிரந்தரமாகிவிடலாம்.

அந்நிலையில் வைகோவால் தமிழகக்தில் அரசியல் செய்ய முடியாது. இவர் ஜெ எதிர் அரசியல் செய்வதை விட (யார் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் கூட) டெல்லியில் தன் முத்திரை பதித்தால் வரலாற்றில் சிறப்பிடம் பெறுவார்.

விஜயகாந்த் அவசரப்படாமல் கூட்டணி ஏதும் ஏற்படுத்திக்கொள்ளாமல் உழைத்தாரானால் 2011ல் ஆட்சியை பிடித்துவிட முடியும். அன்றைக்கும் கூட வைகோ டெல்லியில் இருப்பது தமிழகம் இன்னும் வலுப்பெற உதவும்.

கருணாநிதிக்கு பிறகு தமிழக அரசியல் ஜெ (மட்டுமே) அல்லது ஜெ vs விஜயகாந்த் என்பதாக தான் சுழலும். வைகோ கூட்டணியல் இருந்திருந்தாலும் கருணாநிதிக்கு பிந்தைய திமுகவை கைப்பற்றுவது என்பது சவால் தான். யாருமே அறிந்திராத வாசன் மூப்பனாருக்கு பிறகு தாமாக, காங்கிரஸ் என தலைவராகிவிடவில்லையா. யார் தலைவர் என்ற போட்டியில் இது பரவாயில்லை என ஒத்துக்கொள்ளவில்லையா. இந்த விஷயத்தில் மு.க.ஸ்டாலின் கட்சியை கைப்பற்றுவதில் சிக்கல் ஒன்றும் இருக்கபோவதில்லை. மாறன் சகோதரர்கள் தங்களுக்கு டெல்லி அரியணை தான் வலிமை என கருதுவார்கள். அதனால் மாறனா ஸ்டாலினா என்ற போட்டியும் ஏற்படப்போவதில்லை. மு.க.ஸ்டாலின் தான் திமுகவின் அடுத்த தலைவர் என மக்கள் ஏற்கனவே உணர்ந்துவிட்டாலும் அவர் முதல்வர் ஆக தகுதியுள்ளவரா என யோசிக்கும் கால அவகாசத்தில் ஜெயோ விஜய்காந்தோ முன்னேறிவிடலாம்.

ராமதாஸ், திருமா, வாசன் என எல்லோரும் இருப்பார்கள். அவ்வளவு தான். இந்த பட்டியலில் வைகோவும் கரைந்துவிட வேண்டுமா என அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

முடிவாக வைகோ இன்றைக்கு ஒன்றும் இழந்துவிடவில்லை, வீழ்ந்தும் விடவில்லை. அவரின் சபை சட்டமன்றம் இல்லை அவர் அங்கு தேவையுமில்லை என புரிந்துகொண்டு பாராளுமன்றத்தில் தமிழகத்தின் குரல் மேலும் தெளிவாக ஒலிக்க பாடுபடவேண்டும். அதோடு வைகோ அடுத்தகட்ட சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்க வேண்டும்.