அ முதல் ஃ வரை

நான் படித்தது, பார்த்தது, என்னை பாதித்தது என எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள...

Monday, April 17, 2006

10 கிலோ வாங்கினால் 10 கிலோ ப்ரீ: ஜெ

ஆண்டிப்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கும் ஜெ சரத் வந்த குஷியோ என்னவோ? தானும் ஓரு சபதம் எடுத்தார்.

இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலை முன் நின்று அவரது ஆசியுடன் தமிழகத்திற்கு நல்ல செய்தி சொல்வதாக ஜெ ரேஷன் கார்டுக்கு தற்போது வழங்கப்படும் 20 கிலோ அரிசியில் முதல் 10 கிலோவுக்கு 3.50 ரூபாய்க்கும் அடுத்த 10 கிலோ இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.

கலர் டிவி வாளை சன் டிவி கேடயத்தை கொண்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள். அரிசியை மட்டும் விடுவானே என அறிவித்துவிட்டார் போலிருக்கிறது. சிதம்பரம் வேறு 2 ருபாய்க்கு அரிசி வழங்க முடியும் என உத்தரவாதம் தந்திருக்கிறார். ஜெ கணக்கின் படி அவரது திட்டத்தில் ஒரு கிலோ அரிசியின் அடக்க விலை 1.75 ஆகிறது. கருணாநிதி சொன்னதை விட 25 பைசா கம்மி.

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிதம்பரம் தன் வாக்குறுதி படி மத்திய அரசு அரிசியை வழங்க வேண்டும். அப்படி தராவிட்டால் ஜெ சிதம்பரத்தை தான் கைகாட்டுவார். பலே!

அவர்களின் வலையில் அவர்களே விழுந்துவிட்டார்கள்.

பிட் நியூஸ்.
சரத்தும் ராதிகாவும் அதிமுகவில் ஐக்கியமாகிவிட ராஜேந்தரோ திமுகவில் கரைந்துவிட்டார். நல்லா ஆள் பிடிக்கிறாங்கப்பா.

Friday, April 14, 2006

தேர்தல் ஆணையம் பாரபட்சம் - ஜெ பேட்டி

இன்றைய பேட்டியில்:
1. தேர்தல் ஆணையம் தமிழகத்தின் தினசரி நிர்வாக நடவடிக்கைகளில் கூட தலையிடுவதாக குறை கூறினார்.
Moral of Conduct-ன்படி தாங்கள் தான் புதிய திட்டங்களையும் கொள்கைகளையும் அறிவிப்பதில்லையெனவும் அப்படி சட்டம் எதுவுமில்லை எனச் சொன்னார்.
ஏற்கனவே தொடங்கப்பட்ட சில திட்டங்களை கூட ஆணையம் நிறுத்தி விட்டதாக சொன்னவர் ஆனால் சிதம்பரம் நாடாளுமன்றத்தில் பல சலுகைகளை தொடர்ந்து அறிவித்துக்கொண்டிருக்கிறார். தேர்தல் ஆணையம் ஒன்றும் சொல்லவில்லை. கேரளாவில் முல்லைப் பெரியார்(பெரிய + ஆறு - PERIYAR) பற்றி தீர்மானம் இயற்றுகிறார்கள். அது ஓரு Emotive Issue. ஓட்டுகளுக்காகவே அதை அவர்கள் செய்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் சும்மா தான் இருக்கிறது.
(சிதம்பரம் இன்றும் பல வரி சலுகைகளை அறிவித்திருக்கிறார். இட ஓதுக்கீடும் சட்டமன்ற தேர்தல் அறிவிப்புகள் வெளியான பிறகு தான் அறிவிக்கப்பட்டது)

2. தான் பலருக்கும் உதவிகள் செய்வதாகவும் வெளியே அது தெரியாததால் தான் சினிமா துறையினருக்கு மட்டுமே உதவிகள் வழங்கப்படுவதாக ஒரு மாயத்தோற்றம் இருப்பதாக சொன்னார். தொழில் நுட்ப கலைஞர்களுக்கான வீடு கட்டும் திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லையெனவும் அதையும் அடுத்த ஆட்சியின் ஓரு திட்டமாக சொன்னார்.

3.ஒரு நாடு முன்னேற வேண்டுமானால் பல துறைகளிலும் வளர்ச்சி காண வேண்டுமெனவும் இந்தியாவில் விளையாட்டு துறை Neglected ஆக இருப்பதாகவும் தமிழ்நாட்டிலாவது முயற்சிகள் செய்யலாமே என தான் அவற்றை ஊக்குவிப்பதாகவும் சொன்னார்.
கடந்த ஆட்சியிலேயே அதற்கென ஓரு அமைப்பு தொடங்கப்பட்டதெனவும் அந்த அமைப்பு வீரர்களை அடையாளங்கண்டு அவர்களை தத்தெடுத்து ஊக்குவிப்பதாகவும் சொன்னவர் கடந்த ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஊராட்சியிலும் பொருட்காட்சிகள் நடத்தப்பட்டு நிறைவு நாளன்று விளையாட்டு போட்டிகள் நடப்பதாகவும் அதில் பெருமைப்படுவதாக தெரிவித்தார்.
(ஜெவின் கடந்த அரசில் தான் சென்னையில் சர்வதேச தரம் வாயந்த விளையாட்டு அரங்குகள் கட்டப்பட்டன. ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கி சுடுதல் மற்றும் ஜவகர்லால் அரங்கம் என பல தோன்றின. இந்த விளையாட்டுகள் அதிகம் கவனம் பெறாதாதலும் மக்களிடம் போய் சேரவில்லை. அதோடு இந்த மக்கள் அளவில் சொற்ப எண்ணிக்கையானவர்கள். இதை விட மற்ற விஷயங்கள் பெரிதாக இருந்ததால் பத்திரிக்கைகளும் கண்டுகொள்ளவில்லை. இந்த ஆட்சியிலும் மெரினா நீச்சல் குளம் புதுப்பொலிவுபெற்றிருக்கிறது. புதிய புல் தலை அரங்கங்கள் நிர்மானிக்கப்பட்டிருக்கின்றன. வழக்கம் போல அவை கண்டுகொள்ளப்படவில்லை.)

4. கேரளாவில் மக்கள் எம்.ஜி.ஆர் மீது இன்னும் ப்ரியம் வைத்திருப்பதாகவும் அதிமுக மேல் ஒரு நல்லெண்ணம் இருப்பதாலும் நலன் விரும்பிகள் கொடுத்த உற்சாகத்தினாலும் தொண்டர்களின் ஈடுபாட்டினாலும் இழப்பதற்கு ஓன்றும் இல்லை என்பதாலும் அங்கே அதிக தொகுதிகளில் போட்டியிடுவதாகவும் குறிப்பிட்டார் (அய்யேடா! ஓரு புள்ளி இல்லாம ஒரே வாக்கியமா சொல்லியாச்சு). பலர் நீங்கள் தீவிரமாக ஈடுபட்டால் முதல்வராக கூட ஆகி விடலாம் என சொன்னார்கள் என்றவர் தமிழ்நாட்டுக்கே நேரம் போதவில்லை அங்கே வேறா என ஜோக்கடித்தார். சேச்சி! என்னவோ திட்டம் வைத்திருக்கிறார்.

5. பத்திரிக்கைள் இன்று தன்னை புரிந்துகொண்டு இன்று நெருங்கி வந்திருப்பதாகவும் அதனால் தான் மனநிறைவடைவதாகவும் சொன்னார்.

முத்தாய்ப்பாக இருப்பதும் வாழ்வதும் நாட்டு மக்களுக்கே. எனக்கென்று எதுவுமில்லை. நாட்டு மக்களுக்காத் தான் நான் உழைக்கிறேன் என சொன்னார்(பிரதமர் கனவு இன்னும் இருக்கிறது போல. அதனால் தான் மூன்றாம் கூட்டணி தோன்றியிருக்கிறது. தேர்தல் முடிவுகள் ஜெவுக்கு சாதகமானால் மத்தியில் மாற்றங்கள் உறுதி)

Thursday, April 13, 2006

ஈழம் - ஜெ பேட்டி

இன்றைய பேட்டியில் முக்கியமான கேள்வி. வைகோ, திருமா என கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை பற்றி ரபி குறிப்பிட ஜெ மற்ற கட்சிகளும் (பெயரை சொல்லி) கூட்டணியில் இருப்பாதாக சொன்னார்.

ரபி, தான் வைகோ திருமா பற்றி தனித்து குறிப்பிட்டது அவர்களுக்கு தமிழ் பற்றாளர்கள் என்ற Image இருக்கிறது. அவர்கள் இருவரும் ஈழத் தமிழர்கள் பற்றி அடிக்கடி பேசுபவர்கள். ஆனால் உங்களுக்கும் அவர்களுக்கும் இதில் உள்ள வேறுபாடு பற்றி என்றார்.

சுருக்கமாக பதில் சொன்ன ஜெ ஈழம் என்பது ஓரு Concept, கனவு,குறிக்கோள்,லட்சியம். அதோடு அது இலங்கையின் ஓரு பகுதியை மட்டுமே குறிக்கிறது. ஆனால் தான் மற்ற பகுதிகளில் உள்ள தமிழர்களையும் (எஸ்டேட்களில் வேலை செய்பவர்களும் மலையக மக்களும்) சேர்த்து அவர்களை இலங்கை தமிழர்களாக பார்ப்பதாகவும் அவர்களின் நல்வாழ்வுக்கு பாதுகாப்புக்கு இலங்கை அரசு உதவ வேண்டும் என தன் நிலைப்பாடு பற்றி சொன்னார். (ரபி இன்னும் கொஞ்சம் கிண்டியிருந்திருக்கலாம்)

மற்ற கேள்விகள்:
1) தமிழக அரசு ரேஷன் பெறுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியிருப்பதாகவும் ஆனால் போதிய மண்ணென்னய் இல்லாமல் வழங்க முடியவில்லை எனக் குறிப்பிட்டார். மண்ணென்னய் மாநில அரசால் தனியாரிடமிருந்தோ வேறு யாரிடமிருந்தோ வாங்க முடியாது எனவும் பிரதமர் அதிகாரிகளிடம் ஆணையிட்டும் இன்று வரையில் மண்ணென்னய் பாதியளவிலேயே மத்திய அரசால் வழங்கப்படுவதாக சொன்னார்.

2)தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கடல் நீரை குடிநீராக்குவது (நேற்றைய பேட்டியில் சென்னையின் தேவையை 3 ஏரிகளும் வீராணமும் மட்டும் சமாளிக்க முடியாது கடல் நீரை குடிநீராக்குவது அவசியம் என சொன்னார்), புதிய தலைமைச் செயலகம் (கேரளா கூட சொந்த கட்டடத்தில் இயங்குகிறது) கட்டுவது என்ற திட்டங்களை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவேன் என்றார்.

3) வாரிசு அரசியல் பற்றி விரிவாக பேசியவர் நேரு குடும்பம் கருணாநிதி குடும்பம் ராமதாஸ் குடும்பங்களின் வாரிசுகள் நாட்டு நலனுக்கு நல்ல முன் மாதிரி இல்லை எனக் குறிப்பிட்டார்.

நேற்றுவரை டிஸ்கொத்தேவுக்கு சென்று கொண்டிருந்த விளையாட்டுப்பிள்ளையான தயாநிதிக்கு கேபினட் அந்தஸ்த்தில் நாட்டிற்கே மந்திரி பதவி, அன்புமணியும் அப்படியே! இவர்களை பார்க்கும் இன்றைய இளைஞர்கள் விரக்தியடைந்து படிக்காமல் உழைக்காமல் முன்னேற வேண்டும் எனத் தானே ஆசைப்படுவார்கள் என கேள்வி எழுப்பினார். உழைக்கும் தகுதியுள்ளவர்கள் எல்லா அமைப்பிலும் இருப்பார்கள். தான் எம்.எல்ஏ வாக இருந்தால் தன் மனைவிக்கு எம்.பியாக இருந்தால் மகனுக்கு என்று அவர்களே திரும்பி வருவது என்ன நியாயம்? மற்றவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டாமா என்றார். அதனால் நேரு குடும்பமானாலும் கருணாநிதி குடும்பமானாலும் வாரிசு அரசியலை ஊக்குவிக்க கூடாது என்றார்

CHEMISTRY ya ARITHMETIC-AA
CNN-IBN&HINDU PRE POLL SURVEY பற்றிய செய்திகளுக்கு இட்லி வடை தளத்தை பாருங்கள்.

1)அம்மா பாப்புலாரிட்டியில் முன்னேறியிருக்கிறார்.
2)விஜயகாந்த அம்மாவிடம் இருந்து 26 சதவிகித ஓட்டுக்களை பிரிக்கிறார். அதே அளவில்
3)புதிய வாக்காளர்களின் வாக்குகளை பெறுகிறார். மிச்ச வாக்குகள் 49 திமுகவிடமிருந்து பிரிக்கிறார்.
4)50-50 என தொங்கு சட்டமன்றம் கண் முன்னே தெரிகிறது.
5)ஹிண்டு ராம் It's truly a major shift in the ground. If chemistry favours amma Arithmetic favours DMK+ என்றார். Error of Margin 1% எனும் போது 2% சதவிகதமாவது வித்தியாசம் இருக்க வேண்டும். ஆனால் சர்வே முடிவு இதை காட்டாததால் To close to Call என்று சொல்லிவிட்டார்கள்.
6)இது புதிய வரலாற்றை படைக்கப்போகும் தேர்தல். மத்திய அரசில் ஒரு விளைவை ஏற்படுத்த போகும் தேர்தல் என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.

Side Note:
CNN-IBN is aggresive about covering the South vs the NDTV and Headlines today English news channels. So we can expect more coverage on Tamilnadu on their News. Earlier they dedicated a week's program on Bangalore and those presence for the coverages just last week in Bangalore helped them in getting a mileage today by covering Dr. Rajkumar's last journey. Finally an English News channel arrived to South.

Wednesday, April 12, 2006

கடமையை செய் பலனை எதிர்பாராதே - ரபியிடம் ஜெ தத்துவம் -

ஜெவிடம் இன்று கொஞ்சம் உருப்படியாக கேள்விகள் கேட்டார் ரபி.

1. மத்திய நிதிகளும் ஒழுங்காக வரவில்லை. அரசு கஜானாவோ காலி. ஆனால் எப்படி கவர்ச்சி திட்டங்களை தொடங்கினீர்கள்? அதற்கு நிதி எங்கிருந்து வரும்?
பதில்: வருவாய் இழப்பை சரி செய்வது தான் ஒரு தீர்வு என முடிவு செய்தேன். அரசுக்கு வருமானம் வரும் வழிகள்:
அ. விற்பனை வரிகள்
ஆ. மது விற்பனை
96-01ல் 34000 கோடியாய் வசூல் ஆன வருமானம் தனது ஆட்சியில் கிட்டதட்ட 59000 கோடியாக முன்னேறியது.
அரசு மது விற்பனை செய்யத்தொடங்கியவுடன் 96-01ல் 12000 கோடியாய் வசூல் ஆன வருமானம் தனது ஆட்சியில் கிட்டதட்ட 21000 கோடியாக முன்னேறியது.
மணல் குவாரிகள் மூலம் 64 கோடியாய் வசூல் ஆன வருமானம் தனது ஆட்சியில் கிட்டதட்ட 380 கோடியாக முன்னேறியது.
இதனால் வந்த வருவாய்களை கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

ரபி இங்கே ஆனால் வெளியே மதுவின் விற்பனை வருவாயை சாதனையாக சொல்கிறார்கள் என கிண்டல் செய்கிறார்களே என்றவர் வருவாயை அரசுக்கு சாதகமாக திருப்பிவிட்டிருக்கிறீர்கள். அது சரியா என்றார்?
ஆம் என்ற ஜெ மது விற்பனை எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்கிறது. தனியார் விற்பனை செய்தாலும் அரசு செய்தாலும் மதுவின் அளவு குறையவுமில்லை கூடவுமில்லை. பொய்யாக கணக்குக்காட்டி இழந்து கொண்டிருந்த வருமானத்தை அரசுக்கு திருப்பியதாக சொன்னார்.

அடுத்து லாட்டரி சீட்டை தடை செய்ததன் மூலம் மக்களின் பணம் பொதுவில் வந்து புழங்கியதால் லாட்டரி வியாபாரிகள் சுரண்டிக்கொண்டிருந்த பணம் மக்களின் செலவுக்காக உபயோகமானது. அதனால் பொருளாதாரம் சீரானது எனக் குறிப்பிட்டார்.

2. ரபி அடுத்து, திட்டங்கள் தீட்டுகீறீர்கள் சரி. என்ன Feedback mechanism
வைத்திருக்கிறீர்கள் என்றார்? (ஜால்ரா மட்டுமே காதில் விழுமா! மற்ற ரியாக்ஷனையும் உணர்ந்தீர்களா என கேட்டிருக்கலாம்!)
தனக்கு நண்பர்கள் பத்திரிக்கைகள் மற்றும் வேறு உபயங்கள் மூலம் தகவல் வருவதாக சொன்னார்

3. ஆதிதிராவிடர்களுக்கான விடுதிகளை பற்றி:
தான் 2001ல் ஆய்வு நடத்தியபோது விடுதிகள் வாடகை கட்டங்களில் இயங்கியது என தெரிய வந்ததாதகவும் Running water, Electricity, Sanitation வசதிகள் இல்லையென அறிந்து கொண்டதாகவும் அதனால் அரசுக்கு சொந்தமானதாக அவைகள் இருக்க வேண்டும் எனக் கருதி அதற்கு தேவைப்படும் செலவை எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கூடுதல் தொகை ஓதுக்கி 761 விடுதிகளை 5 ஆண்டுகளில் கட்டியிருப்பதாக சொன்னார். இந்த விடுதிகள் இப்பொழுது தரமாக இருப்பதாகவும் தண்ணீர், மின்சாரம், கழிப்பிட வசதிகள் உள்ளடக்கியதாகவும் இருக்கிறது என குறிப்பிட்டார். அதோடு அவர்களுக்கு இலவசமாக Atlasம் Tamil-English
dictionaryயும் வழங்கப்படுவதாக சொன்னார். (இது அறிவு வளர்க்க பயன்படும். டி.வி?. யாராவது விடுதிகளின் தரத்தை நேராக கண்டவர்கள் உறுதியோ மறுப்போ சொல்லாம்)

4. அறிவியல் தமிழ் என்ற பாடநூல் பற்றி கேட்டார்
தமிழகத்தில் இப்பொழுது எல்லா பள்ளிகளிலும் (அரசு/தனியார் உள்பட) இந்த பாடம் கட்டாயமாக கற்றுத் தர வேண்டும் என இருப்பதாக சொன்னார்.
ஆனால் தமிழினக் காவலர் 96-ல் டில்லியில் உள்ள Jawarhalal Nehru university தமிழுக்காக ஒரு இருக்கைக்கு(chair) அரசிடம் ஒரே தவணையில் 50 லட்சம் கேட்டதாகவும் இவரோ நாங்கள் வருடத்துக்கு பத்து தருகிறோம் என அனுப்பியதாகவும் அந்த பத்தையும் பல்கலைகழகம் திருப்பிஅனுப்பிவிட்டதாகவும் கலைஞர் அத்துடன் அப்படியே விட்டுவிட்டதாகவும் சொன்னார். பின்னர தான் வந்த பிறகு ஒரே தவணையில் 50 லட்சத்தையும் செலுத்தி இருக்கை இன்று
இருப்பதாக பெருமையுடன் குறிப்பிட்டார். (somebody can throw some light on this Chair. I don't understand how this functions..)

ரபி ஜெ இந்த விஷயம் தனக்கு தெரியாதனெவும் இது போல பல சாதனைகளை நீங்கள் விளம்பரப்படுத்தியிருக்க வேண்டாமா எனக் கேட்டார். புன்னகையே பதிலாக வந்தது.

தனிப்பெரும் ஜெயலலிதாவின் சாதனைகள் என அவர் புகழ் பேசிய போது இது எனது தனிப்பட்ட சாதனையல்ல மக்களின் அன்பும் ஆதரவினால் தான் சாத்தியமானது என தன்னடக்கம் காட்டினார்.

கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என தான் தன் பணியை செய்வதாகவும் வெற்றியில் துள்ளுவதும் தோல்வியல் துவளுவதும் இல்லாமல் மனதை சீராக வைத்திருந்தால் வாழ்ககையில்
வெற்றி பெறலாம் என ஜெயாமர்த்தினியாய் மாறி தத்துவம் சொன்னார்.

அத்துடன் இன்றைய பேட்டி நிறைவு பெற்றது.

Cross-Adverstising என்று சொல்வார்கள். சில கோளாறினால் என்னுடைய இந்த பதிவில் மற்றவர்கள இடும் பின்னூட்டங்கள் தமிழ்மணத்தில் அப்டேட் செய்யப்படுவதில்லை. அதனால் இன்றைய துயரச் செய்தியான ராஜ்குமார் காலமானார் பதிவுக்கு தொடுப்பு கொடுத்திருக்கிறேன்.

Tuesday, April 11, 2006

தயாநிதி மாறன் பேட்டி - இந்தியா டுடே

இந்த வார இந்தியா டுடேவில் தயாநிதி மாறனின் வெளி வந்திருக்கிறது. இந்தியா டுடே வழக்கமாக ஜெயை மட்டம் தட்டியும் திமுகவை தாங்கியும் தான் வெளி வரும். அவர்களுடைய India Today - Conclave நிகழ்ச்சியிலும் IT & Telecom அமைச்சர் என்ற தகுதியில் சிறப்பு விருந்தினராகவும் இருந்திருக்கிறார். இந்தியா டுடேயின் சிறந்த அமைச்சர் பட்டியலில் மன்மோகன் சிங், சிதம்பரம் போன்றோருடன் தயாநிதி மாறனும் இடம் பெற்றிருக்கிறார்.

அதனாலேயே இந்த பேட்டி கவனம் பெறுகிறது. எப்பொழுதும் சிரித்த முகத்துடன் கார்ப்பரேட் தோரணையுடன் இருக்கும் மாறனை புகைப்படம் பிடித்து போட்டவர்கள் இன்றோ அவர் ஒரு குழப்பமான கோபத்துடன் இருப்பதான ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். பேட்டியும்
மாறனை வாருவதாக தான் இருக்கிறது.

சில கேள்வி பதில்கள்: (ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கபட்டது. முழுமையானது அல்ல. நான் திரிக்கவும் அல்ல. வேண்டுமானால் பிழையான மொழிபெயர்ப்பாக இருக்கலாம்.)

1. டெல்லியில் Reformist ஆக இருக்கும் நீங்கள் தமிழகத்தில் Popularist ஆன வாக்குறுதிகளை அள்ளித் தெளித்திருக்கிறீர்களே. Is that not a sign of desparation?
பதில்: நீங்கள் ஓன்றை புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் "Poppularism" தான் வேலை செய்யும். நாங்கள் மீண்டும் வர வேண்டுமானால் இதை செய்து தான் ஆக வேண்டும்.

2. நீங்களும் NDA யிவிலிருந்து UPA க்கு தாவினீர்களே?
பதில்: Ours is policy based, principle based stance. we were against POTA and we were fighting the cause of Vaiko. (இதில் வைகோவை சோனியா "Liar" என்று சொன்னாராம்!)

3. Jayalalitha பற்றி:
பதில்: She is an autocrat. அவர் நினைத்ததை தான் செய்வார். யாரையும் மதிக்க மாட்டார் .
தொடர்ச்சியாக இ.டுடே: But economic indicators are not showing that....
பதில்: அது நாங்கள் 96-2000 த்தில் ஏற்படுத்திய அஸ்திவாரத்தின் மேல் எழுப்பபட்டது. இவர் ஓன்றும் புதிதாக செய்துவிடவில்லை.

4. சன் டிவி பற்றி:
பதில்: அதை பற்றி கேட்காதீர்கள். என் அமைச்சம் சம்பந்தபட்ட கேள்விகளை மட்டும் கேளுங்கள்.

5. உங்கள் குடும்பம் அந்த துறையில் இருக்கும் போது நீங்கள் வகிக்கும் பதவியும் "Office of profit" ன் கீழ் வராதா?
பதில்: நான் அந்த துறை அமைச்சர் இல்லை. அதற்கு வேறு அமைச்சர் இருக்கிறார்.

6. சன் டிவிக்கு விளம்பரங்கள்....
பதில்: உண்மையில் ஜெயா டிவிக்குத்தான் கோடிக்கான விளம்பரங்கள் போகின்றன.

7. Are you subsidising Jayalalitha?
பதில்: அந்த குற்றத்தை என் மேல் சுமத்தலாம். என் துறையில் நான் கண்டிருக்கும் வளர்ச்சியே என் மேல் குற்றமாக சொல்லாம். 1500 ரூ. தயாரிப்பில் செல்போன் கொண்டு வந்தேன்.

8. ஆனால் அது உங்கள் மாநிலத்தில் இருந்து....
இல்லை. அது நாட்டிற்கே முதலீடாகத்தான் பார்க்க வேண்டும்.

இப்படி போகிறது...

நன்றி: India Today.

Monday, April 10, 2006

தினசரி கடனுக்கான வட்டியே 11 கோடி ரூ. - ஜெ பேட்டி

ஜெ பேட்டி:

மூன்றே கேள்விகள் தான் இன்றைக்கு. இரண்டு கேள்விகள் அம்மாவை குஷிப்படுத்த
1. எப்படிங்க அம்மா உங்க மனசில இப்பிடி திட்டமெல்லாம் உதிக்குது?
2. உங்களை ஏன் எல்லோரும் ஒழிக்க நினைக்கிறாங்க?
(எந்த புத்திசாலித்தனமும் இல்லாத கேள்விகள். ஓரு வேளை அம்மாவை சகஜ நிலைக்கு கொண்டு வர இப்படி கேட்டாரோ!)

3. முதல் 3 ஆண்டு நடவடிக்கைகளை மக்கள் புரிந்து கொள்ளவில்லையா?
மூன்றாவது கேள்வியை சரியாக புரிந்துகொண்டு சில நடவடிக்கைளின் பிண்னணியை விளக்கியிருந்திருக்கலாம். மாறாக அதுவும் நியாயப்படுத்ததலாக முடிந்துவிடும் என நினைத்தாரோ அதை தவிர்த்தார்.
38000 கோடி கடனுடன் தினமும் 11 கோடி வட்டியாக மட்டுமே செலுத்துகின்ற நிலையில் அரசு நிதி நிலையை விட்டுச்சென்றது திமுக என குறிப்பிட்டார். இது போதாது என்று வறட்சி, சுனாமி, கனமழை வெள்ளம் என தமிழகம் இயற்கையால் பாதித்தது. மோசமான நிதிநலையை சீரமைப்பதோடு மட்டுமில்லாமல் நிவாரணப் பணிகளையும் தொடர்ச்சியாக செய்தது தன்
அரசின் பெரிய சாதனையாக குறிப்பிட்டார். சென்னையின் குடிநீர் தேவையை சமாளித்தவிதமும் தனது அரசின் சாதனையாக குறிப்பிட்டார். (இங்கும் மழை நீர் சேமிப்பு திட்டத்தின் அவசியத்தையும் விரிவாக சொல்லியருக்கலாம்)

நாம் கண்டது:
இந்த 5 ஆண்டில் ஜெ திறப்பு விழா அடிக்கல் நாட்டு விழா என எதுவாக இருந்தாலும் தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே தான் செய்தார். (இது திராவிட கட்சிகளின் வரலாற்றிலேயே காணாத ஒன்று. 91-96 ஆட்சியில் இவரும் ஆடம்பரமாக தான் விழாக்கள் நடத்தினார்.) இது கண்டிப்பாக அரசு நிதியை வீணாக்காத நடவடிக்கை. இது போன்ற விஷயங்கள் சிறிதாக
இருந்தாலும் ஜெவிற்கு இதனை விளம்பரபடுத்த தெரியவில்லை. [மாறாக திமுக மத்திய அரசு விழாக்களை தங்கள் கட்சி விழா போல ஏகப்பட்ட வண்ண பத்திரிக்கை விளம்பரங்களோடும் ஆடம்பரங்களோடும் அரங்கேற்றியது]

ஆச்சரியம்:
ரபி பெர்ணார்ட் எப்போது இப்படி தொண்டரடிப்பொடியாள்வாராக மாறினார் என்பது. "காலத்தின் கொடையே" என கவிதை வாசிச்கிறார். கேள்விகளை ஜெவை பாராட்டி தொடங்குகிறார்.

அறிமுகப்படுத்தும் போது தன் பழைய நினைவுகளை சிலாகிக்கிறார். அம்மா மன்னிக்கும் குணம் உள்ளவர் என பெருமை கொள்கிறார் (இருக்காதே பின்ன! வளர்ப்பு மகன் திருமண லைவ் கவரேஜ் வீடியோவை பார்த்த பிறகும் அம்மா இவரை சும்மா விட்டாரே)

Wednesday, April 05, 2006

விஜயகாந்த் - பற்றிய ஆருடம்

நண்பர்களுக்கான தனிச்சுற்றில் தவசி படம் வெளிவந்த போது எழுதிய விமர்சனம். அப்பொழுது டான்சி தீர்ப்பால் ஜெ பதவி இறக்கப்பட்டு பன்னீர் செல்வம் முதல்வராயிருந்தார்.

அதில் விஜய்காந்த் அரசியலுக்குள் நுழைவதற்காக தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறார் என்பதாக உடுக்கை அடித்தேன். அது நிஜமாகி விட்டது.


அந்த பதிவு இங்கே தவசி - திரைப்பட விமர்சனம்

மேலும் நான் விஜயகாந்த பற்றி ஏற்கனவே எழுதியவை:
1
2
3

மற்ற தலைப்புகளில் நான் எழுதியதில் இருந்து:
இன்றைக்கோ விஜயகாந்த களத்திலிருக்கிறார். எனக்கென்னவோ விமர்சனம் செய்பவர்கள் அவரின் சக்தியை குறைத்து எடுபோடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. சிவாஜி, டி.ஆர், பாக்யராஜ் போன்று தன்னை நம்பி மட்டும் தடலாடியாக களத்தில் குதிக்கவில்லை இவர். தகுந்த முன்னேற்பாடுகளுடனும் திட்டமிடலுடனும் தான் அரசியல் களத்தில் குதித்திருக்கிறார். அந்த முனைப்புக்கு உழைப்புக்கு பரிசில்லாமல் போகாது.

பார்ப்போம் இதுவும் பலிக்கிறதா என்று?

Monday, April 03, 2006

இலவச டிவி - விகடன் கட்டுரை

விகடனின் திமுக அரசியல் சார்பு தெரிந்தது தான்.

ஆனாலும் செய்தியில் உண்மையை சொல்லிவிட்டு ஓப்புக்கொள்ள மனமும் இல்லாமல் அவர்கள் பாங்கே தனி தான்.

இந்த வார ஜுனியர் விகடனில் திமுக இலவச டி.வி வழங்குவது தொடர்பான சாத்தியக்கூறுகள் பற்றி கட்டுரை எழுதியிருக்கிறது. அதில் அதிமுக அரசு முதல் 3 வருடங்கள் எடுத்த நடவடிக்கைகள் நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சமாக இருந்ததையும் ரிசர்வ் வங்கி விதித்த கட்டுபாடுகளையும் குறிப்பிட்டு அந்த நடவடிக்கைகள் அன்றை தேவை என சொல்கிறது.

இன்றைக்கு புதிய இலவச திட்டங்களுக்கு நதி நிலைமை இடம் கொடுக்காது என்றும் நிபுணர்கள் சொல்வதாக குறிப்பிடுகிறது.

கட்டுரையே திமுகவின் இலவச வாக்குறுதிகளின் சாத்தியம் பற்றியது தான். அதை விமர்சனமும் செய்யவில்லை. கட்டுரை என்றளவில் இதுவும் ஏற்க கூடியது தான்.

ஆனால் சந்தோசபடலாம் என ஆறுதல் தருவது புரியவில்லை. அந்த வரிகள்:
எத்தனை நாளைக்குத்தான் தமிழன் கலிங்கத்து பரணியையும், சங்கத் தமிழையும் மனதால் மென்று கொண்டிருப்பது? கொஞ்சம் கனவையும் மெல்லட்டுமே!

Saturday, April 01, 2006

பெரும்பாண்மை கிடைக்குமா?

தமிழக வாக்காளர்கள் எப்போதும் ஒரே ஒரு கட்சிக்கு தான் பெரும்பாண்மையாக வாக்களிப்பார்கள் என ஒரு கருத்து இருக்கிறது. இது எந்தளவு உண்மை?

சில தேர்தல்களை தவிர அனைத்து தேர்தல்களிலும் ஒரு அலை வீசியது. அந்த அலையின் காற்றில் மக்கள் பெரும்பாண்மை நிலை எடுத்தார்கள்.

கொஞ்சம் யோசித்து பார்த்தால்,
1)ஹிந்தி திணிப்பு, திராவிடம், தமிழ் என ஒரு அலை எழுப்பி காங்கிரஸை திமுக வீட்டுக்கு அனுப்பியது.
2)பின்னர் கணக்கு கேட்டு எம்.ஜி.ஆர் ஒரு அலை எழுப்பி திமுகவை வீட்டுக்கு அனுப்பினார்.
3)எமெர்ஜென்ஸி, ஆட்சிகலைப்பு என்ற எதிர்ப்பு அலையில் எம்.ஜி.ஆர் நிரந்தரமாய் தங்கி விட்டார்
4)ஜா. ஜெ சேவல் புறா சண்டை நடத்தி அலை எழுப்பி தாங்களே அதில் மூழ்கியும் போனார்கள்.
5)ராஜீவ் கொலைசெய்யப்பட்டுவிட அனுதாப அலையில் இந்த முறை இரட்டை இலை கரை சேர்ந்தது.
6)அடுத்து வந்த ஆழி பேரலையான ஊழல் சுனாமி அதிமுகவை வீட்டுக்கு அனுப்பியது.

இந்த தடவை அப்படியொரு அலை இன்னும் எழவில்லை. மீண்டும் மக்கள் பெரும்பாண்மையாக ஒரே கட்சிக்கு வாக்களிப்பார்களா? அதே போல கடந்த தேர்தல்களில் காங்கிரஸ் vs திமுக, திமுக vs அதிமுக (5க்கும் மேல்) என்றே இருந்திருக்கிறது. கூடுதலாக யாரும் போட்டியிடவில்லை.

இன்றைக்கோ விஜயகாந்த களத்திலிருக்கிறார். எனக்கென்னவோ விமர்சனம் செய்பவர்கள் அவரின் சக்தியை குறைத்து எடுபோடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. சிவாஜி, டி.ஆர், பாக்யராஜ் போன்று தன்னை நம்பி மட்டும் தடலாடியாக களத்தில் குதிக்கவில்லை இவர். தகுந்த முன்னேற்பாடுகளுடனும் திட்டமிடலுடனும் தான் அரசியல் களத்தில் குதித்திருக்கிறார். அந்த முனைப்புக்கு உழைப்புக்கு பரிசில்லாமல் போகாது.

திமுகவில் இருக்கும் காங்கிரஸின் வாக்குகள் அவர்களின் அந்த கால தியாகிகளின் மிச்ச வாக்குகள் என்றே நான் நினைக்கிறேன். 5 வருட கால அவகாசத்தில் அந்த வாக்குகளில் கணிசமானவை காற்றில் கரைந்திருக்கும். காங்கிரஸின் உழைப்புக்கு புதிய இளம் வாக்காளர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே. அதுவும் இது சட்டமன்ற தேர்தல் வேறு.

இப்படி எந்த ஒரு ஆதரவான அலையோ எதிர்ப்போ இல்லாத நிலையில் ஒரு கட்சி மட்டும் பெரும்பான்மை அடைந்து விடுமா?

அங்கங்கே உள்ள நிலவரப்படி ஒவ்வொரு கட்சியும் கணிசமான எண்ணிக்கை பெற்று தொங்கு சட்டமன்ற நிலை வருவதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது.

அப்படி ஒரு கூட்டணி ஆட்சி ஏற்பட்டால் அதில் அதிமுக. மதிமுக. தேமுதிக. விசி எல்லாம் இருக்கும்.

கொசுறு: ஜெ திமுக சந்திக்கும் கடைசி தேர்தல் என குறிப்பிட்டார். இதில் திமுக தோற்றாலும் ஜெயித்தாலும் விஜய்காந்திற்கு லாபம் தான். அதிமுக தோற்றாலும் லாபம் தான். அதிமுக வெற்றி பெற்றால் அவரின் நாற்காலி கனவு 2011 லும் சாத்தியப்படாமல் போகலாம்.

திறனாய்வுள்ள தமிழ்சசி போன்றவர்கள் மக்களின் மனநிலை பற்றி ஒரு பதிவு போடலாம்.

குமுதம்: ஜெ எக்ஸ்குளுசிவ் பேட்டி

குமுத்தில் ஜெ பற்றிய அறிமுக வாசகங்கள்:

தங்கத்தாரகை என்ற பட்டத்திற்கேற்ப தகதக்கும் முகம். எதிராளியை நூறு சதவிகிதம் அப்படியே எடைபோடும் தீர்க்கமான பார்வை. தொடரும் தன்னம்பிக்கை கலந்த செளந்தர்யப் புன்னகை.

இது நாள் வரையில் மீடியா தனக்கு ஆதரவாக இல்லை என்று வருத்தப்படாமல் இருந்த ஜெ இப்போது கண்டுக்கிறார்களே என மகிழ்ச்சி கொள்ளலாம். அவர் குமுதத்தின் வாசகராம். அவரே சொன்னது! (பத்திரிக்கைகள் கூட படிப்பாரா என்ன?...)

தினமலர், தினத்தந்தி, குமுதம் என அவர் ஆதரவு கூடியிருக்கிறது. மற்றவர்களோ இது அவர்களின் பயத்தை காட்டுகிறது என சிரிக்கிறார்கள். எது எப்படியோ ஊடகங்கள் அம்மா பக்கமும் மேளம் வாசிக்கின்றன.

பேட்டியில் வைகோ பற்றி: "வற்றாத தமிழ் உணர்வு". (ஜெவுக்கு இப்படி சிக்கலில்லாமல் தேர்ந்தெடுத்து கூட பேச வருமா என்ன? உஷாரு தான்!)

கருணாநிதி பற்றி:
தரம் தாழ்ந்த விமர்சனம், ஆபாச சொற்களை தான் பேசுதல், மற்றவர்களை பேச விட்டு அதை கேட்டு ரசித்தல், பெண்மையை கொச்சைபடுத்துதல், எதிரிகளை பழி வாங்க துடித்தல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பொய் வழக்குகள் புனைதல், நீதி அரசர்களையே பெட்டி வாங்கி விட்டார்கள் என கொச்சைபடுத்துதல்... (கொஞ்சம் சுருக்கியிருக்கிறேன். சுயவிமர்சனமும் செய்து கொண்டு கூடுதலாக கொஞ்சம் சேர்த்திருக்கிறார்!)

மற்றபடி பேட்டியில் ஏற்கனவே தெரிந்த சங்கதிகளை ஜெயின் வாயால் வாங்கி போட்டிருக்கிறார்கள்.