அ முதல் ஃ வரை

நான் படித்தது, பார்த்தது, என்னை பாதித்தது என எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள...

Tuesday, February 28, 2006

வைகோ - திருவாசம் அறிமுக விழாவில்

யாழிசை கேட்பது எப்போது? என்று எழுதிய பிறகு வைகோவின் உரையை கேட்க ஆர்வம் வரும்.

அந்த ஒலிக்குறிப்பு இங்கே வைகோ - திருவாசம் அறிமுக விழாவில்

மேலும்:
என் திருவாசக அனுபவம்

யாழிசை கேட்பது எப்போது?

வைகோ திருவாசகம் Oratorio அறிமுக விழாவில் தன் பாராட்டுரையால் நம்மை கவர்கிறார். அந்த உரைக்காக அவர் எப்படி தன்னை தயார்படுத்தியிருக்கிறார் என காணும் போது வியப்பாயிருக்கிறது. நகைச்சுவைக்கு சொல்வது போல புள்ளிவிவரம் அறிந்திருப்பவர்கள்
எல்லாம் புத்திசாலிகள் இல்லை என இல்லாமல் உண்மையிலேயே ஒரு ஆர்வம் காட்டி பேசுகிறார்.

பழக்கத்தில் இருந்த யாழ் பற்றியும் குறிப்பிடுகிறார். யாழ் இனிது குழல் இனிது மக்கள் தம் மழலை சொல் கேளாதவர் என பேசி்க்கொண்டு யாழிசை எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள ஏன் நமக்கு ஆர்வம் வரவில்லை?

இத்தனை விஷயங்கள் அறிந்திருந்தும் யாழை யாரும் புதுப்பிக்க முயலாதது எப்படி என ஆச்சரியமாய் இருக்கிறது. எத்தனையோ குறிப்புகள் வைகோ குறிப்பிடுகிற இலக்கியங்களில் இருக்க வேண்டும். மாதிரி யாழ் லண்டன் மியூசியத்திலும் இருக்கிறது என்ற தகவலையும் வைகோ சொல்கிறார்.

அந்த யாழை மீண்டும் உருவாக்க ஆர்வம் காட்ட வேண்ட பட்டியலில்
1. இளையராஜா போன்றவர்கள்
2. சங்கீதம் பயிலுபவர்கள்/ வித்வான்கள்
3. வீணை தயாரிப்பவர்கள்
4. தஞ்சை தமிழ் பல்கலைகழகம்
5. சென்னை இசைக் கல்லூரி
6. மதுரை தமிழ் சங்கம்
7. மதுரை ஆதீனம்
8. தமிழிசையில் கச்சேரி செய்ய வேண்டும் என போராடும் பா.ம.க
9. தமிழுக்காக அதை செய்தோம் இதை செய்தோம் என சொல்லும் தி.மு.க
10. இன்னும்

செய்வார்களா? யாழிசை கேட்க முடியுமா?

தேர்தல் காய்ச்சல்

நன்றி: குமுதம், பாலா.


பாலாவின் கோழிகள் நிஜமாகவே பரிதாபமாகத்தான் இருக்கிறது. திருமாவை விட்டு்ட்டீங்களே பாலா. நாம் போடு்ம் ஓட்டு தான் அந்த கோழிகளுக்கு மருந்தா அல்லது கடைசி சொட்டு தண்ணியா எனப் புரிய வைக்க போகிறது.

Monday, February 27, 2006

ராதிகா - ராடன் - தங்கவேட்டை

கிழக்கே போகும் ரயிலில் வந்திறங்கிய ராதிகாவா இது என்று இன்றைக்கு ராதிகாவை பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

ராதிகா என்ற நடிகையை, ஒரு தயாரிப்பாளரை பார்க்கையில் இது! இது தான் வளர்ச்சி! என சொல்லும்படியாகவே இருக்கிறது. ஒன்றுமே தெரியாமல் வந்து இது தான் நமது வாழ்வு என தீர்மானித்தவிட்ட பிறகு அதில் தன் முயற்சியை செலுத்தி தன் ஆளுமையை பதிவு செய்வது அவ்வளவு எளிதல்ல. இன்றைய நடிகர்களில் சூர்யாவை அந்த பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

ராதிகாவை பலர் ஒரு நடிகை என்பதை மீறி அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்து ஒதுக்கி விடுகிறார்கள். ஆனால் இன்றைய பெண்களுக்கு ராதிகா கண்டிப்பாக ஒரு பாடம் தான்.

நடிகையாக மட்டுமில்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் ஆகி தமிழ்நாட்டையே சித்தி, அண்ணாமலை, செல்வி என இரவு காத்திருக்க வைத்திருக்கிறார். இந்த தொடர்கள் தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் சன் நெட்வொர்க்கின் மற்ற சானல்களிலும் ஒளிபரப்பாகிறது. சூர்யாவும் உதயாவும் ரீமேக் செய்து ஒளிபரப்புகின்றன. ஜெமினியில் டப்பிங் குரலுடன் வருகிறது.

(தொடர்கள் வெற்றியடைந்திருந்தாலும் அவற்றின் தன்மை கொஞ்சம் கவலை அளிக்கிறது. பழிவாங்கலும் நல்லவர்கள் கடைசி வரை போராடுவதும் இழந்து முன்னேறி பின் மன்னிப்பதும் என ஓரு ஃபார்முலாவை ராடன் உருவாக்கியிரு்கிறது. இதில் கெட்டவர்கள் அவர்கள் நினைத்ததை கடைசி வரை சாதித்துக்கொள்கிறார்கள், போதாதைக்கு மன்னிப்பு வேறு கிடைத்து விடுகிறது. நல்லவர் கடைசி வரை அவமானப்பட்டுக்கொண்டும் போராடிக்கொண்டே இருக்க வேண்டியது தான். ஒருவேளை ராதிகாவின் வெற்றிக்கு காரணம் இது தானோ?

நல்ல காமெடி சீரியல்கள் தயாரிக்கலாமே! சின்ன பாப்பா பெரிய பாப்பா இல்லையா என கேட்காதீர்கள். இதை சின்ன குழந்தை முதல் ஏன் ஆண்கள் கூட ரசிக்கிறார்கள் என நான் கண்ட போது அதிர்ச்சியாயிருந்தது. இத்தொடர் முழுக்க மட்ட ரகமான சீண்டலும் அடுத்தவரை கேவலப்படுத்துவதுமே பிராதனமாயிருக்கிறது.)

ராடன் நிறுவனம் என தொடங்கி சீரியல்கள் என்று மட்டுமில்லாமல் கேம் சோக்கள், சினிமா, தொலைக்காட்சிக்கான சினமா, மற்ற நாடுகளில் உள்ள தமிழ் சானல்களிலும் நிகழ்ச்சி என வேர் பரப்பியிருக்கிறது. ராடன் இன்னும் வித்தியாசமான முயற்சியிலும் நல்ல நிகழ்ச்சிகளிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என ஆசையாய் இருக்கிறது.

ராடன் பங்குகள் சந்தையிலும் இருக்கிறது. இப்பொழுது இல்லையென்றாலும் ராடன் சீக்கிரமே வடக்கே ஏக்தா கபூரின் பாலாஜி பிலிம்ஸ் போல பெரிதாக ஒரு நாள் தங்கப்புதையலாக மாறும். வேட்டைக்கு ரெடிராயாயிருங்க.

Friday, February 24, 2006

லாட்டே ஃபாக்டர்

நீங்கள் யு.எஸ்ஸியிலேயே காலத்துக்கும் குடியிருக்க முடிவு செய்தவரா? தினமும் ஸ்டார்பக்ஸில் லாட்டே அருந்துபவரா?
சிகரெட் தண்ணியும் அடிப்பவரா?
ஓஹோ! அங்கு கூட போவீர்களா? அந்த பழக்கம் வேறா?
இவ்வளவுக்கும் மத்தியில் ஒரு வீடு, மனைவி, குழந்தைகள் என கனவு கொண்டவரா?

நிறுத்தேய்! உங்க சவுண்டு எனக்கு கேட்குது. நான் ஒன்னும் புதுசா வலை விரிக்கலை சாமி.

நம்ம ஊருல பத்து தலைமுறைக்கு சொத்து சோர்க்கனும்பாங்க, வீடு கட்டணும்பாங்க, தங்கம் வாங்கணும்பாங்க... இன்னைக்கு Y2K பின்னாடி ஐ.டி யும் , கிரெடிட் கார்டும் வந்த பிறகு எனக்கு எதுக்கு பொண்டாட்டி கதையா சகட்டு மேனிக்கு கார்ட தேச்சு தேச்சு தள்றோம். உல்லாச பயணம் என்ன? சர்ட்டிங் சூட்டிங் என்ன? தீம் பார்க்க என்ன? ன்னு செலவு வைக்க
ஏராளம் இருக்கு. இதுல ஒரு தலைமுறைக்கு கூட நம்மால சொத்து சேர்க்க முடியாது போல. நம்ம எங்க பத்து தலைமுறைக்கு...

ஒரு வட்டம் போல இந்தியாவில இன்றைக்கு இது சகஜமாகிவிட்டது.

எதுக்கு இவ்வளவு பீடிகைன்னா....

கிரெடிட்டிலியே வாழற யு.எஸ் மக்கள நம்ம பாதைக்கு இழுத்துட்டு வர்றது பத்தி ஏராளமான புத்தகம் எழுதிட்டாங்க. டாக் ஷோக்களில் கூட சேமிக்க வேண்டிய முக்கியத்துவம் பத்தி பேசறாங்க.

அதுல நான் படிச்ச ஒரு புத்தகம் தான் "டேவிட் பாச்" எழுதிய "ஆட்டோமெட்டிக் மில்லியனர்". நியைற சீரிஸ் கூட ரிலீஸாயிருக்கு. அதுல உள்ள கருத்து எல்லோருக்கும் பொருந்துன்னாலும் 401k பத்தி, இங்கே உள்ள வலைமுகவரி பத்தி நியைற தகவல் இருக்கறதுனால யு.எஸ்ஸிலேயே
செட்டில் ஆக முடிவில் இருக்கறவங்க படிக்க வேண்டிய புத்தகம் இது. 300 பக்கத்துல தினம ஒரு மணி நேரம் படிச்சா கூட ஒரு வாரத்தில முடிச்சரலாம். சும்மா தூக்கம் வரலைன்னு படிக்க ஆரம்பிச்சா கூட முடிக்காம தூங்கமாட்டீங்க.

மத்தவங்க சும்மா ஒரு விஷய ஞானத்துக்காக படிக்கலாம்.

ஒரு நாளைக்கு ஒவ்வொரு லாட்டேயே குடிக்கறவங்க அது முறையான வழியில முதலீடு பண்ணா எப்படி 30 வருஷத்துல பெருகும்ன்னு முதல் பாடத்திலேயே லாட்டே ஃபாக்டர் பற்றி எளிமையா சொல்லி கண்ண திறக்கறாரு. ஏன் கிரெடிட் கூடாதுன்னு நமக்கு தெரியாத சங்கதிகளை அவுத்துவிடறாரு. சொந்த அனுபவத்திலேயே நானே கூட மினிமம் ட்யூவோ பாக்கியோ கிரெடிட் எப்படி வைரஸ் மாதிரி பரவுமின்னு தெரிஞ்சதால படிக்க சுவராஸ்யமா இருந்தது.

அதிகப்படியாவா ஆடம்பரமாகவோ செலவு செய்யாட்டியும், சில்லறை செலவு இருக்கு பாருங்க அது இன்னும் ஆபத்து. ஏன்னா அட இவ்வளவு தானான்னு நாம செலவழிக்கறத கணக்கு பண்ணுனா பயங்கர ஆச்சரியமா இருக்கும். ஒரு சிகரெட், ஒரு ஆட்டோ, கால் டாக்ஸி படிக்கிற பேப்பர் எல்லாமே அடங்கொக்கமக்கா ங்கற கணக்கா உங்கள பயமுறுத்தும்.

இன்னாடா! நாளைக்கு உலகம் அழிஞ்சுறுங்கற ரேஞ்சில பேசறானேன்னு பயந்துடாதீங்க.

இன்னைக்கு செய்ய முடியுற செலவை நாளைக்கு செலவு பண்ணணுமின்னா நாம என்ன முயற்சி எடுக்கனும் அப்படிங்கறதுக்கான ஒரு பாடம் தான் இந்த புத்தகம்.

நீங்களும் கண்டிப்பா படிங்க. கடன் அடைங்க. பயன் பெறுங்க.

Thursday, February 23, 2006

ஒரே பாட்டில் சிவனும் 910ம் வரைந்தது எப்படி?

அன்பே சிவம் சன் டி.வியில் ஒளிபரப்பிய பிறகு ஆளுக்கொரு போஸ்ட் போட்டாயிற்று. (நானும் தான்.அன்பே சிவம் )

அப்படி போட்டவற்றின் ஒரு பின்னூட்டத்தில் ஒருவர் அதெப்படி அந்த சிவனும் 910 சேர்ந்த மூரலை ஓரே பாட்டில் வரைய முடியும் என கேட்டிருந்தார். அப்போதைக்கு ஒன்றும் தோன்றவில்லை.
கண்ட நாள் முதலாய் படத்தை நேற்றும் (Nth term என்பதை எப்படி சொல்வது?) பார்க்கையில் அது எப்படி ஒரே சம்பவத்தில் ரம்யா(லைலா) கிருஷ்ணாவை (பிரசன்னா) மன்னித்து விடுகிறார் என தோன்றியது. அதோடு கூட காதலும் தோன்றிவிடுகிறது. மூன்று மாதங்கள் பாடல் காட்சியில் கடந்துவிடுகிறது.

ஓரே பாட்டில் எப்படி என்ற கேள்விக்கு பதிலாக அன்பே சிவத்துக்கான பின்னூட்டத்தில் ஒருவர் தமிழ் இயக்குனர்கள் காலத்தை விரிவாக சொல்ல முடியாததால் பாட்டை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பது சமாதானம் தருவதாய் இருந்தது.

அன்பே சிவத்தின் பாலாவையே நம்ப முடியாதவர் எப்படி அண்ணாமலை ஒரே பாட்டில் 3-4 மாடு வைத்து பால் கறந்து பால்கோவாவாக்கி பண்ணையாக்கி வெண்ணெய் வியாபரம் என கொடி நாட்டி தமிழகத்தின் பெரும் பணக்காரர் ஆவதை பார்ப்பார் என நினைக்கும் போது கவலையாக இருந்தது.

இப்படி யோசிக்க ஆரம்பித்தால் ஒரு படம் கூட பார்க்க முடியாது போல. அதனால் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடல் வெவ்வேறு கால அளவு சொல்ல பயன்படுகிறது என யூகித்துவிட்டால் ரசிக்கலாம். அந்த கேள்வி கேட்டவரும் பதில் சொன்னவரும் என் கண்ணை திறந்து விட்டார்கள். அவங்க யாருன்னு கண்டுபிடிக்கணும். அந்த பதிவு இந்த பதிவுன்னு எல்லாத்தையும் படிச்சதால அவங்களை எங்கே படிச்சேன்னு மறந்து போச்சு.

வானவில் (கூட்டணி) ஒரு மாயத்தோற்றம்

ஆக கூடி திருமாவளவன் வானவில் கூட்டணி போட்டியிடவிருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை அவர்கள் சார்பாக அதிகாரபூர்வில்லாமல் அறிவித்து விட்டார். செய்தி ஆதாரம்: http://www.thatstamil.com/ திமுகவின் உள்நோக்கம் வேறு எனவும் கோடிட்டிருக்கிறார்.

உள்ஒதுக்கீடு ஏற்கனவே பார்த்த படம் போல இருக்கிறது. இப்படித்தான் முன்பொருமுறை ம.தி.மு.க வெளியில் சென்றது. இந்நிலையில் திருமாவின் செய்தி ஜெ.விற்கு கூட்டணியில் புதுக்குழப்பம் விளைவிக்க பயன்படுக்கூடும்.
ஆனால் பா.ம.க தனியாக திருமாவுடன் கூட்டணி சேர்ந்து கரை சேர முடியுமா? இப்பொழுதே விஜயகாந்த் எவ்வளவு வாக்குகளை பிரிப்பார் என்று சொல்ல முடியாது. ரஜினி ரசிகர்களும் இன்னும் வன்மம் வைத்திருப்பார்கள். அது அதிமுகவிற்கு போய்விடும். இந்த வாக்கு இழப்பை சரி செய்ய வேண்டுமானால் விடுதலை சிறுத்தைகளின் வாக்கு வங்கி தான் கைகொடுக்கும். அதனால் தான் இத்தனை தாஜாவும் நடக்கிறது. அதுவும் இனி நடக்காது.

குறைந்த பட்சம் திமுகவுடன் இருந்தால் திருமா பிரிக்கப்போகும் வாக்குகளை ஓரளவுக்கு திமுக வாக்குகளால் சரி செய்துவிடலாம். அப்படி இல்லாமல் திருமாவுடன் தனித்து போட்டியிட்டால் சுலபத்தில் அதிமுக மாம்பழம் சாப்பிட்டுவிடும்.

கலைஞர் சரியாகத்தான் செக் வைத்திருக்கிறார். இதன் மூலம் பாமக போய்விடாதபடியும் கொடுக்கும் எண்ணி்க்கையை வாங்க வேண்டிய கட்டாயத்திலும் நிறுத்திவிட்டார். மதிமுக பற்றிய மீடியாக்களின் மிகைபடுத்தலும் வைகோவின் மனசாட்சி கூட்டங்களில் அடித்த மணியும் அவர்கள் நினைத்ததை இல்லாவிடினும் தாங்களும் பெரிய கட்சி தான் என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார்கள்.

ஆனால் இவை எல்லாமே தேர்தல் நேரத்தில் உள்குத்தாக எதிரொலிப்பதில் பிரகசாமான வாய்ப்பிருக்கிறது.

கம்யூனிஸ்ட்டூகள் அவர்கள் பலத்தில் வந்துவிடுவார்கள். விளிம்பு நிலையில் வாக்குகள் உயர்வதற்கு வழி செய்வது தவிர காங்கிரஸால் திமுகவிற்கு பெரிய பலமில்லை. காங்கிரசுக்கு தான் திமுக தயவு தேவை.
மதிமுக போட்டியிடும் இடங்களில் திமுகவினர் அக்கறை காட்டமாட்டார்கள. பாமக ஏற்கனவே பெரிய கண்ணி வெடியில் சிக்கியிருக்கிறது. அவர்கள் வீழந்தாலும் எழுந்தாலும் திமுகவிற்கு ஒரு இழப்புமில்லை. பாமக தான் லல்லு நிலைமைக்கு சரியும். திமுக விற்கு எதிராக மதிமுகவினர் செயல்பட அவ்வளவு வாய்ப்பில்லை என்றாலும் அம்மாவின் காஞ்சி கும்மிடி வலையில் விழ வாய்ப்பு இருப்பதையும் மறப்பதற்க்கில்லை. பல மாவட்ட செயலாளர்கள் ஏற்கனவே அம்மா ஆதரவு நிலையில் என ஜு.வி சொல்கிறது.
விஜயகாந்த் கணிசமாக பரிக்கப்போகும் வாக்குள் வேறு திமுகவுடையது தான்.

அதோடு ஸ்டாலினா ? ஜெ.வா ? என்பது தான் அதிமுக மறுபடியும் எழுப்பும் கேள்வியாக இருக்கும். இந்நிலையில் ஜெ.வின் வாய்ப்பு தான் அதிகம் தெரிகிறது.

வானவில் ஒரு மாயத்தோற்றம் தான். இந்த கூட்டணியும் அப்படித்தானா?

Monday, February 20, 2006

கண்ட நாள் முதலாய்...

கண்ட நாள் முதலாய்... கேட்டவுடனேயே பிடித்து விடுகிற பாடல். பாம்பே ஜெய(இந்த sri ..யை எப்படி ஐயா டைப் செய்வது?) பாட வைத்திருக்கலாம். தாய், குழந்தை, குமரி என அனைவருக்குமே பொருந்தியிருக்கும்.

முதன் முதலாய் கேட்டதால் இது தாமரை எழுதியதா என ஆச்சரியம். ஏனென்றால் அவர் பெயரே பாடல்கள் என திரையில் வருகிறது. என்ன ராகமாய் இருக்கும் என யோசித்து கொண்டே படத்தை மீண்டும் பார்க்கையில் பாட்டு போட்டியில் லைலா மெல்லிய குரலில் "மதுவந்தி" என சொல்லி சுருதி சேர்க்க சொல்கிறார். ஆக பாடல் ஏற்கனவே கர்நாடக மேடையில் பாடப்படுவதாக இருக்க வேண்டும் என விசாரிக்கையில் "சுதா ரகுநாதன" (மட்டுமே!?) "Sriranjani" என்கிற தொகுப்பில் பாடியிருப்பது தெரிந்தது. இயற்றியவர் பெயரில்லை. கொஞ்சம் வருத்தம் தான்; யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

"அலைபாயுதே" போன்று மிக எளிதில் மனதில் உட்கார்ந்து விடுகிற பாடல் ஏன் பிரபமலமாகவில்லை என புரியவில்லை. இந்த படத்தால் மேடையில் பாடுவர்கள் என நம்பலாம்.

படம் மீதான விமர்சனம் பிறிதொரு பதிவில்... இப்போதைக்கு ஒரு வார்த்தையில் அந்த படத்தை பற்றி சொல்ல வேண்டுமானால் "Ultimate!" (தமிழ் வார்த்தை என்னப்பா?)

அன்பே சிவம்

தருமியின் இடுகையையும் பின்னூட்டங்களையும் படித்த பிறகு எழுதத் தோன்றியது.

அது என்னமோ பெரும்பாலான குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் கமலை விட ரஜினியை தான் அதிகம் பிடித்திருக்கிறது.

சமீபத்தில் ஒரு நண்பியுடன் "அன்பே சிவம்" பற்றி பேசி கொண்டிருக்கையில் ஒரு நுணுக்கமான தகவலை சொல்லி, தான் இதை ரசிக்கவில்லை என்று சொன்னார். கமலின் நடிப்பையும் அவர் தாகத்தையும் பாராட்டிவிட்டு, இது போன்று சில முயற்சிகளால் தான் பிடிக்கவில்லை என்றும் கூறினார்.

"அன்பே சிவம்" படத்தில் வில்லன் ஒரு சிவ பக்தர். அல்லது அதை ஒரு முகமூடியாக பயன்படுத்திக்கொள்பவர். படத்தின் இறுதியில் அன்பை பொழிவது ஒரு கன்னிகாஸ்த்திரி. எல்லோருக்குமாக சென்று சேரும் படத்தில் இது போன்ற ஒரு தகவல் சொருகல் கமலின் நோக்கத்தை சந்தேகப்பட வைக்கிறது என்றார்.

சேவை என்று சொன்னாலே நமக்கு முழு அங்கி அணிந்தவர்கள் தான் ஞாபகம் வருவதால் அவ்வாறு செய்திருக்கலாம் என்று சமாதானமும் சொன்னேன். அதற்கு வில்லனை சாதாரண ஒரு ஆளாக காண்பித்திருக்கலாம். ஏன் அவரை மதத்துடன் அடையாளப்படுத்த வேண்டும் என்றார். மேலும் சமூக சேவையை முகம் தெரியாத அளவில் விளம்பர படுத்தாமல் பலர் செய்கின்றனர். அதையும் காண்பித்திருக்கலாமே என்றார்.சரியென்றே பட்டது.

கமலின் நோக்கம் அதுவாக இருக்காது என்று நம்பலாம். ஆனால் கவனம் காட்டலாமே.

எனக்கு தோன்றிய தோல்விக்கான காரணம்:
அன்பே சிவம் சரியாக போகாததில் எனக்கும் வருத்தமே. பார்த்தவர்கள் அனைவருமே பிடித்திருக்கிறது என்றே சொல்கிறார்கள். ஆனால் ஏன் ஓடவில்லை? படம் வெளியான சமயத்தில் தியேட்டரில் தான் பார்கக வேண்டும் எனப் போய் பார்த்தேன். அழுக்குத் திரையில் குறைந்த ஒலி ஒளியுடன் தான் பார்க்க முடிந்தது. வெறுத்துப் போனேன். அதே படம் அடுத்த வாரமே திருட்டு வி.சி.டியில் துல்லியமாக இருந்தது. எங்கே போய் இந்த கொடுமையை சொல்ல.

வெளிநாடு சென்ற திரும்பியவர்களுக்கோ, அல்லது தங்கி விட்டவர்களுக்கோ அவர்களை மாதவனுடன் அடையாள படுத்திக்கொள்ள முடிகிறது. ஆனால் சாதாரண பொதுஜனத்திற்கோ கம்யூனிஸ்ட்டான கமலையோ ஒரு நாகரீக மாதவனையோ தங்களுடன் பொருத்திக்கொள்ள முடியவில்லை என நினைக்கிறேன். அதனால் கூட இந்த படம் லாப ரீதியாக தோற்றிருக்கலாம்.

Thursday, February 16, 2006

கண்ணாடி பூக்கள்

இரண்டு வெவ்வேறு படங்கள். ஒன்று ஒரு வாலிபனை பற்றியது. மற்றொன்று பாலகனை பற்றியது. இருவருமே தாங்கள் முற்றிலும்
திட்டமிடாத ஒரு மரணத்துக்கு காரணம் ஆகிவிடுகிறார்கள். அது விபத்து என்றாலும் கொலை குற்றமாக கருதப்பட்டு தண்டனை
அனுபவிக்கிறார்கள்.

"கண்ணாடி பூக்கள்" என ஷாஜகான் இயக்கிய படம் ஒன்று. "அது ஒரு கனாக்காலம்" என பாலுமகேந்திராவின் படம் மற்றொன்று.

இந்த இரு படங்களுமே இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத காவல் அதிகாரியை காட்டுகின்றனர். பாலகனிடம் இரக்கம் காட்டாமல்
சட்டமும் கடமையும் முக்கியம் என கருதும் ஒருவர். சட்டம் முக்கியம் தான்; அதைவிட அந்த சட்டத்தின் பணி குற்றத்தை உணர
செய்வதையும் திருந்த வாய்ப்பு கொடுக்கவுமே என்பதால் அது நிறைவேறிய பிறகு மனிதாபம் காட்டி மன்னிப்பதே நியாயம் என கடமை மீறும் ஒருவர்.

படவிமர்சனங்கள் இந்த இடுகையின் நோக்கமல்ல. அது உணர்த்தும் உளவியல் துன்பங்களை பற்றித்தான்.

கோயில் ஒன்றில் ஒரு தம்பதியையும் அவர்களின் குழந்தைகளையும் கண்டேன். 3 வயது மதிக்கதக்க ஒரு பெண் குழந்தை. 1 வயது
முடியாத ஆண் குழந்தை. கோயிலுக்குள் வந்தவுடன் பெற்றவர்கள் பிள்ளைகளை விட்டுவிட்டு பிரார்த்தனையில் ஒன்றி விட்டார்கள்.
வந்திருந்த மற்றவர்கள் அந்த ஆண் குழந்தையை கொஞ்ச ஆரம்பித்தார்கள். தங்கள் சாவிக்கொத்தை கொடுத்தார்கள். தூக்கி
கொஞ்சினார்கள். பெண் குழந்தையால் பொறுக்க முடியவில்லை. அது அம்மாவின் கவனத்தை தேடியது. அம்மாவோ கண்டு
கொள்ளவே இல்லை. உட்கார்ந்திருந்தவரின் தொடையில் ஏறி குதித்தது. படிக்க கையில் வைத்திருந்த பாட்டு புத்தகத்தை
பிடுங்கியது. அம்மா அடிக்காத குறைதான். ஆனால் மகனிடமோ அதே புத்தகத்தை காட்டி விளையாட்டு. அடுத்தவர்கள் இன்னும்
பையனிடம் விளையாட்டு காட்டி கொண்டிருந்தார்கள். பார்ததது. அவன் கையில் இருந்த சாவிக்கொத்தை பிடுங்கி எறிந்தது.
அம்மாவிடம் அவனை தர தர வென இழுத்துவந்து போட்டது. பையன் அதையும் ஒரு விளையாட்டாக எடுத்துக்கொண்டு சிரித்துக்
கொண்டேயிருந்தான். ஆனால் அப்பாவோ அம்மாவோ இந்த காட்சியின் பின்னால் உள்ள உணர்வை கண்கூடாக தெரியும் போதும்
உணரவேயில்லை. அல்லது இது சகஜம் என வி்ட்டிருக்கவேண்டும்.
"பிளாக்" என்ற ஹிந்தி படத்தில் ராணி முகர்ஜியின் சகோதரி பாத்திரம் ஒன்று வரும். கண் தெரியாத சகோதரிக்கு பெற்றவர்கள்
காட்டும் கூடுதல் அக்கறை வெறுப்பாக மாறி தான் படும் துயரத்தை சொல்வார்.

இதே போன்ற உளவியல் ரீதியாக பலர் தினம் தினம் நிதானம் இழக்கிறார்கள். தன்னம்பிக்கை இழக்கின்றனர். சிலர் பயத்தை
உருவாக்கிக்கொண்டு ஒடுங்கிவிடுகின்றனர். சிலர் தவறான தொடர்புகள், போதை மருந்துகள் என பாதை மாறுகிறார்கள். இவற்றையெல்லாம் நின்று நிதானமாக ஆதரவாக கவனிக்கத்தான் ஆள் இல்லை.

இன்றைய போட்டியான உலகில் குழந்தைகளை பெற்றவர்கள் படுத்தும் பாடு சொல்லி மாளாது. ஒரு பத்து வயது சிறுவனுக்கும்
சிறுமிக்கும் தங்களுக்கு இருக்கிற தன்மான உணர்வு இருக்கும் என உணர்வதேயில்லை. மற்றவர்கள் முன்னால் கண்டிக்கப்படும்
போது அவமானமாய் உணர்கிறார்கள். முளைச்சு மூணு இலை விடலை அதுக்குள்ள பாரு என அவற்றை அலட்சியபடுத்தியும்
விடுகின்றனர்.

அந்த இரு படங்களில் வரும் காவல் அதிகாரிகளின் செயல்களுமே உளவியல் சம்பந்தமுடையது தான். சட்டம் கடமை எங்கே
தேவையென ஒருவருக்கு புரிந்திருக்கிறது. ஆனால் அதன் குறுக்கே புகுந்து தான் மன்னிக்க முடிகிறது. மற்றவருக்கு சட்டம் கடமை
மட்டுமே முக்கியம் எனப்படுகிறது. தண்டனை வாங்கிக்கொடுப்பது மட்டுமே தன் வேலையென நடந்து கொள்கிறார். அது தவறில்லை
தான். ஆனால் கண்டிப்போடு அணுகுமுறையில் புரிதலும் இருக்க வேண்டியது அவசியம்.

பெற்றவர்களும் ஒரு குழந்தையை, வளர்ந்த மகனை மகளை எவ்வாறு வளர்ப்பது என தடுமாறி எரிச்சலோ அல்லது காணாமலோ
இருந்து விடுகிறார்கள். இதற்கு ஒரு தீர்வு என்று ஒன்றுமில்லை. ஒவ்வொருவருக்கும் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி ஒரு வழிகாட்டுதல்
தேவைப்படுகிறது. இந்த விவாதங்களை பகிர்தலை ஊடகங்கள் செய்ய முடிந்தால் பெரும் பயன் விளையும்.

ஆனால் தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் ஒரு பன்ஞ் டயலாக்கும், மதிப்பெண் கொடுத்தும் திருப்தி அடைந்துவிட்டன. இதில்
நாயகனுக்கு எதிராக, சார்பாக என்ற அரசியல் வேறு.

இவர்கள் நினைத்திருந்தால் ஒரு ஆரோக்கியமான விவாதத்தையோ அலசலையோ உருவாக்கி புதுப்பாதை காட்டியிருக்கலாம். எங்கே?

Wednesday, February 15, 2006

புதுக்கணக்கு

ஒரு வன்னியரை காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக அறிவித்ததன் மூலம் ஜெ.விற்கு ஒரு செக் வைத்திருக்கிறார்கள். திண்டிவனத்தின் கலகக்குரலை இதன் மூலம் அடக்கிவிட்டார்கள். அவர் பா.ம.க தலைவரின் சம்மந்தி என்பதால் இரு கட்சிகளும் இனி நெருங்கி விடும்.

இந்த புதிய வியூகத்தால் தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க கூட்டணி குலைய வாய்ப்பில்லை. இது ஏற்கனவே தெரிந்தது தான். பாமகவை ஜெயாவும் மீட்க முயலவில்லை. அதனால் முரண்டுபிடித்தாலும் சமாதானமாகிவிடுவார்கள். இப்பொழுது ம.தி.மு.க எவ்வளவு கொடுத்தால் தங்கும் என்பது தான் குழப்ப தோற்றத்தை தருகிறது. அவர்களோ இன்றைய நிலையில் 50 கேட்டு நெருக்குகிறார்கள்.

கலைஞர் கம்யூனிஸ்ட்டுகளை தியாகம் (ஆளுக்கு 4 ஒதுக்கினால் தானாகவே போய்விடுவார்கள்) செய்துவிட்டு ஒரு புதுகணக்காக
தி.மு.க - 134
காங்கிரஸ் - 35
பா.ம.க - 30
ம.தி.மு.க - 30
மற்றவை - 5
என ஒதுக்கினால் ம.தி.மு.க தங்க வாய்ப்பிருக்கிறது. அவர்களுக்கும் 15-க்கு 30 ஒரு கெளரவமாக இருக்கும்.

தி.மு.க வின் கவலையெல்லாம் தனிப் பெரும்பான்மையாகத்தான் இருக்கும். தமிழக வாக்காளர்களின் மனப்போக்கில் வெற்றியான கூட்டணி என கருதும் போது அது தானாகவே வாக்குளை பெற்று விடும். அப்படியே குறைந்தாலும் ம.தி.மு.க வின் எதிர்காலம் கருதி அவர்கள் திமுகவையே ஆதரிப்பார்கள். ஸ்டாலின் பெயர் தோன்றும்போது தான் எதிர்ப்பு காண்பிப்பார்கள். அந்நிலையில் காங்கிரஸோ பாமகவோ ஆதரிப்பார்கள். 5 ஆண்டுகள் சுலபமாக தள்ளி விடலாம்.

என்ன செய்கிறார் கலைஞர் என பார்ப்போம்.

பாதுகாப்பது நம் கடமை

இன்றைய தினமலரில் புதுப்பிக்கபட்ட மீனாட்சி அம்மன் கோவில் மடப்பள்ளியின் புகைப்படம் வெளியாகி இருந்தது. புதிய கோயில்
போன்று தூண்களில் ஒரு பொலிவு. கடந்த ஐந்து வருடங்களாக புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. தெப்பக்குள சுவற்று ஓவியங்களை அழித்து மறுபடியும் வரைந்து கொண்டிருக்கிறார்கள். (இவர்கள் காட்டுகிற வேகத்தின் படி முழுமையாக ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்.) எதுவானாலும் இந்த முயற்சி சந்தோஷம். சனீஸ்வர சந்நிதிக்கு பின்னால் உள்ள நடராஜர் சந்நிதி மண்டபத்தை தியான மண்டபமாக உபயோகிக்க வழி செய்திருக்கிறார்கள்.

ஆனால் கோயிலுக்கு செல்பவர்கள்கள் அதன் கலை அழகையும், திறனையும் பாரம்பரியத்தையும் அதை போற்றி பாதுகாக்க வேண்டிய
முக்கியத்துவத்தையும் உணர்ந்திருக்கிறார்களா தெரியவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்னால் நான் கோயிலுக்கு சென்றபோது கண்டவை அதிர்ச்சி ரகம். கோயில் தூண்களை (சில) நூதன முறையில் சுத்தம் செய்து புதியது போல ஆக்கியிருக்கிறார்கள். ஆனால் மக்கள் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் குங்குமத்தையும் திருநீற்றையும் அவற்றின் மீது கொட்டி விட்டு
செல்கிறார்கள். ஏற்கனவே சுவாமி சந்நிதி கொடிமரம் அருகே ஒரு தூணில் ஆஞ்சநேயர் அஞ்சனம் தடவி நிற்கிறார். இது போதாது எனவோ மற்றொரு தூணில் உள்ள ஒரு அம்மன்(?) உருவத்தை கண்டுபிடித்து பாவாடை சுற்றியிருக்கிறார்கள். கூடுதலாக தரை எங்கும் குங்குமம் இரைந்து கிடக்கிறது. விளக்கு, பேப்பர் மாலை இத்யாதி என மேலும்...ஆபத்து என்னவெனில் சாமி குற்றம் என்ற பெயரில் இந்த பழக்கங்களை தடுக்க முடியாதிருப்பது தான்.

விளக்கு போடுகிறேன் என துர்கை சந்நிதி, தட்சிணாமூர்த்தி சந்நிதி என தரை முழுவதும் எலுமிச்சை கரை ஏற்படுத்தி இருக்கிறார்கள். எந்த வெண்ணெய் வியாபாரி ஆரம்பித்த வழக்கமோ இன்னும் காளி சிலையும் அதன் பிண்ணால் உள்ள தூண்களும் வெண்ணெய்க்கரை.

தெப்பத்தை பூங்காவாக மாற்றுகிறேன் என இறங்கி ஒரே தொட்டி + இரும்பு கிராதி மயம். இது உள்ளே என்றால் வெளியே சரியான கழிப்பறை வசதியில்லாததால் குளோரினும் சிறுநீரும் குப்பையும் சேர்ந்து புதிய வாடை. சில சிறுநீர் தடுப்பையும் கோயில் சுவர் அருகேயே கட்டியிருக்கிறார்கள்.
இதில் கோயிலை உலக அதிசயமயமாக்க தடபுடல் ஏற்பாடு. தினமலர் போன்ற பத்திரிக்கைகள் உலக அதிசயமயமாக்கலுக்கு செலவிடும் பக்கங்களை தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒதுக்கலாம். கோயிலின் பெருமையும் அதன் கலை அழகும் போற்றி பாதுகாக்க வேண்டியது நம் கடமை என்பதை நெஞ்சில் பதிய தினசரி முயற்சி செய்ய வேண்டும். அது ஒரு நாள் அல்லது ஒரு வருட சம்பிரதாயம் அல்ல. தினசரி செய்ய வேண்டியது. செய்வார்களா?

புதுப்பிக்கும் நல்ல முயற்சியில் கூட அதன் தனித்தன்மை குலையாமல் செய்ய திட்டமிடுவது அவசியம். அதற்கு தேவை ஆராய்ச்சியும், தேர்ச்சியான நிபுணர்களின் உதவியும் தான். அவசரம் அல்ல.

இந்த அக்கறையற்ற பட்டியலில் மேலும் பல இருக்கிறது. தஞ்சை பெரிய கோயில், சிதம்பரம், Sriரங்கம் ஒவ்வொன்றும் ஒரு சோகம்.

= அடித்தால் தமிழில் sri வரவில்லை. யாரேனும் தெரிந்தால் தகவல் தாருங்களேன். நன்றி்!

அந்நியன் (அ)நியாயம்?

அந்நியன் படத்தின் சில காட்சிகளை டி.விக்களில் பார்த்த பிறகு உடனடியாக பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை. பார்த்த சில தண்டனை காட்சிகளும் ஏமாற்றமளித்தன. சுஜாதா பல்வேறு விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த படத்தை ஒரு விதமான ஃபான்டஸியாக எடுத்துக் கொள்ள சொல்லியிருந்தார்.

சமீபத்தில் அந்த படத்தை பார்த்தேன். சங்கர் வழக்கம் போல பிரம்மாண்டமாக எடுத்திருந்தார். திருவையாற்றின் சங்கீத உற்சவத்தையும் வேறு பாடலில் டூலிப் தோட்டங்களின் அழகையும் பிரமாதமாக திரைக்கு கொண்டு வந்திருக்கிறார். மகிழ்ச்சி.

தண்டனை கொடுக்க புறப்படும் அந்நியன் யாருக்கும் திருந்த வாய்ப்பு கொடுக்கவில்லை. அவர்கள் மன்றாடியும் அந்நியன் அந்நியனாகவே இருக்கிறான். ஆனால் தன் காதலிக்கு தண்டனை என வரும்போது அந்நியனுக்குள் அம்பியும் அம்பிக்குள் அந்நியனும் பெரும் போராட்டம் நடத்துகிறார்கள். (சபாஷ் விக்ரம்!) முடிவு உங்களுக்கு தெரிந்திருக்கும்.

ஊழலையும் தவறுகளையும் ஒழிப்பதில் உள்ள சிக்கலே தன் உறவு (குமுதத்தில் ஒருவர் குறும்பாக அவாள் என அரசு பதில்
கேட்டிருந்தார்) என வரும் பொழுது காணாமல் இருந்துவிடுவது தான். சங்கரே சொல்கிற மாதிரி இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு
பைசாவாக திருடுவதால் தான் அதை ஒழிக்க முடியவில்லை. கதாநாயகி நாயகனுடன் சேர வேண்டு்ம் என்கிற தமிழ் சினிமா இலக்கணப்படி மன்னித்து திருந்தி விடுகிறார். இத்தனைக்கும் நாயகிக்கு ஒரு வலுவான பாத்திரமும் இல்லை. அவள் காதலிப்பதும் ரெமோ என்பவனை. இதனால் ஃபாண்டஸி ஃபாண்டஸியாகவே இருந்து விடுகிறது.

ஆக கூடி அந்நியன் தனக்கு ஒரு நியாமும் அடுத்தவர்களுக்கு வேறு ஒரு நியாமும் என ஒரு சரசாரியாகிவிடுகிறான். நாயகி முன்
கூட்டியே காப்பாற்றி விடுகிறாள் என சமாளிப்பு வேண்டாம். ஒவ்வொரு இந்தியனுக்கும் இது போன்ற கோபம் அடுத்தவரிடத்தில்
இருக்கிறது. (அவை என்ன என்ன என சொல்லவே ஒரு தனி இடுகை தேவைப்படும் என்பதால்..தவிர்க்கிறேன்) இதில் எப்படி
ஊழல்களை ஒழிப்பது? தவறுகளை திருத்துவது?

சங்கர் போன்றவர்கள் தங்கள் திறமையை ஏற்கனவே நாம் அறிந்தவற்றை இவ்வளவு செலவு செய்து கொடுப்பதற்கு பதில் ஆக்கபூர்வமான கருத்தை சொல்ல முயற்ச்சிக்கலாம். சுஜாதாவையுத் கூட வைத்துக்கொண்டு விஞ்ஞான முன்னேற்றத்தில் தமிழ்நாடு இன்னும் 50 வருடத்தில் எவ்வாறு இருக்கும் என யோசிக்கலாம். அல்லது "Anna and the King" or "Crouching Tiger and
Hidden Dragon" போல ஒரு சுவராஸ்யமான வரலாற்றையோ அமானுஷ்யத்தையோ செய்யலாம். சங்கரிடம் இருக்கும் அந்த
பிராம்மண்ட யானைக்கு இவை நல்ல தீனியாக இருக்கும். தமிழக தயாரிப்பாளர்களிடமோ அல்லது இயக்குனர்களிடமோ சங்கரின்
இந்த பலம் இல்லை. கமலின் மருதநாயகத்தை கூட இருவரும் சேர்ந்து முனையலாம்.

அந்நியனை பற்றி என்னுடைய முந்தைய இடுகையை இங்கே படிக்கலாம்
http://deedaya.blogspot.com/2005/08/anniyan-anniyamai.html

சிவாஜி இதில் எந்த வகையோ? பார்ப்போம்.

Thursday, February 09, 2006

தமிழ் கார்ட்டூன்

தமிழகத்தில் கார்ட்டூனிஸ்ட் என்றால் மதன் மட்டுமே அறியப்பட்டிருக்கிறார். அவரையும் மீறி சிலர் இருக்கிறார்கள்.
தினமணியில் வரைந்த 'உதயா' (குமார்?) வும், இப்பொழுது குமுதத்தில் பாலாவும் நெத்தியடியாக அரசியல் கார்ட்டூன்
வரைகிறார்கள். துணிச்சல் வேண்டும் நம் ஊர் அரசியல்வாதிகளை கிண்டலடிக்க.

பாலா தமிழ் கார்ட்டூனில் வண்ணம் புகுத்தியிருக்கிறார்.அவருடைய
பார்வையில் அனைவரும் புஷ்ட்டியாக இருப்பார்கள் போல.
பாலா வரையும் படங்கள் ஒரு வகையில் குழந்தைகளுக்கான காமிக் படங்கள் போல இருக்கிறது. அதனாலயே என்னவோ
பார்த்தவுடன் முகத்தில் அறையும் உண்மை நிலவரம் புலப்பட்டாலும் சிரிக்க முடிகிறது.

சில படங்கள் இங்கே.

Wednesday, February 08, 2006

பாண்டிச்சேரியும் மலையாளப்படமும்

மலையாள இயக்குனர் கமல் இயக்கிய ஸ்வப்னக்கூடு என்ற திரைப்படம் பார்த்தேன். ஓரு மலையாள திரைப்படத்தின் களம்
பாண்டிச்சேரியாய் இருந்தது ஆச்சரியம் தந்தது.

கதை ஒன்றும் புதிதில்லை. ஒரு அதிரூப சுந்தரியை மூன்று ஆண்கள் காதலிக்கிறார்கள். அதில் அவள் விரும்பும் ஒருவனை
மணக்கிறாள். திரைக்கதையில் தான் வித்தியாசம்.

தமிழில் ஹிட் கொடுத்த வெவ்வேறு ஹீரோக்கள் ஒன்று சேர்ந்து நடித்தால் அது கின்னஸ் பட்டியலில் சேர்க்க வேண்டியது தான்.இதில் பிரித்விராஜ், போபன் மற்றும் ஒருவர் (பெயர் தெரியவில்லை, ஒரு தமிழ் படத்தில் ஊமையாக வருவார்) என அனைவருமே ஹிட் கொடுத்தவர்கள். மீரா ஜாஸ்மின் தான் கதையின் நாயகி. கதையும் அவரை சுற்றி தான். பிரமாதமான நடிப்பு.

தங்கும் வசதிகள் அதிகம் இல்லாத ஒரு இடத்தில் மக்கள் தங்கள் வீடுகளையே விடுதிகளாக்கி விடுகிறார்கள். வீட்டு உணவு என்ற
சலுகை வேறு. வெளிநாட்டினரும் இது போன்ற வீடுகளை நம்பி வருகின்றனர். மீரா ஜாஸ்மினும் இது போன்ற ஒரு தொழிலில்
இருக்கிறார். அதே வீட்டின் இன்னொரு பகுதிக்கு காட்டெரிங் படிக்கும் மூவர் குடி வருகின்றனர். அவர்களுக்குள் யார் மீராவை மடக்குவது என போட்டி. ஆச்சரியமூட்டும் திருப்பமாய் லைலாவும் தோன்றுகிறார்.

பாண்டியின் ஃபிரெஞ் காலணி திரையில் அருமையாய் வந்திருக்கிறது. பாடலுக்கு மட்டுமே ஃப்ரான்ஸ் சென்றிருப்பார்கள் போல.
மற்றபடி குறைந்த தயாரிப்பு செலவில் நல்ல திரைப்படம். முழு நேரம் போவதும் தெரியவில்லை.

தமிழ் இயக்குனர்களுக்கு ஏன் பாண்டியை மையமாய் வைத்து கதை ஒன்றும் தோன்றவில்லை? கடல், ஃபிரெஞ் காலணி , ஆரோவில் என அருமையான கதைகளம் இருக்க வித்தியாசமாய் ஏன் படம் அதிகம் வரவில்லை?

Tuesday, February 07, 2006

தனித்தவில்

மழை தூரிக்கொண்டிருந்த மாலை நேரம் ஓரு அமெரிக்க நகரத்தில், அதுவும் டவுன்டவுனில் இரயில் நிறுத்தத்தை நோக்கி நகர்கையில் தூரத்தில் ஓரு தாளக்கோர்வை கேட்டது. எங்கோ கேட்ட மாதிரி உணர்வு. அருகில் செல்லச் செல்ல தமிழ் மணம் வீசியது. கல்யாண தவில் போல!

ஓரு ஆப்பிரிக்க அமெரிக்க இளைஞன் காலி பெயிண்ட் டப்பாக்களை கொண்டு ஓரு சின்ன கச்சேரி செய்து கொண்டிருந்தான். சங்கீதம் கற்றுக்கொள்ளாமல் போனோமே என்று வருத்தம் உண்டாயிற்று. கேள்வி ஞானத்தால் அது ஏனோ ஓரு சரிகமபத ஸ்வரத்தில் இருப்பது புரிந்தது. சுமார் பத்து நிமிடம் எந்த மேற்கத்திய வாடையுமில்லாமல் ஓரு தனி தவில் ஆவர்த்தனம் கேட்டது போன்ற சுகம்.

பக்கத்தில் சென்று எங்கே கற்றுக்கொண்டாய் என கேட்க வேண்டும் போலிருந்தது. மழை இன்னும் விடாது இருக்க, இரயிலும் வர வீடு நோக்கி வந்து விட்டேன்.

அடுத்த தடவை கேட்க வேண்டும்...அவன் இசையையும் என் கேள்வியையும்!

மீனாட்சி பவனமும் மிஷனும்

நடிகர் கார்த்திக் அகில இந்திய கட்சியின் மாநில தலைவராகிவிட்டார். அவர் எந்த கூட்டணியில் இருக்க வேண்டும் என அடித்துக் கொள்கிறார்கள். பசும்பொன் தேவர் பற்றி நடிகர் கார்த்திக் சொல்லித்தான் தேவரின மக்களும், தமிழக மக்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன?

கார்த்திக் பின்னால் தேவரின இளைஞர்கள் அணிவகுப்பதாக (வேடிக்கை பார்க்க என்றாலும்) சொல்வது கவலை தருகிறது.

மீனாட்சி பவன் என்ற உணவகத்தை கிட்டத்தி்ட்ட தனி அடையாளத்துடன் வெவ்வேறு ஊர்களில் கிளைகள் பரப்பி ஓரு நிறுவனத்துக்குண்டான ஒரு முகவரி பெறுவது சாதாரண விஷயமல்ல. மதுரையில் உள்ள கிளை போன்றே கும்பகோணத்திலும் காணும்பொழுது அந்த நேர்த்தி புரிகிறது. இன்முகத்துடன் உபசரிக்கும் ஊழியர்களை பார்க்கும் பொழுது அவர்களுக்கு சேவை என்றால் என புரிந்திருப்பது சந்தோஷமளி்க்கறது. மதுரை தெருவோர அப்பத்தா கடை பனியாரமமும், மல்லிகை இட்லியும், கொத்தமல்லி சட்னியும் ருசி மாறாமல் எங்கும் கிடைக்கும் என அந்த அங்கீகாரம் பெருமை தான்

மதுரையில் மருத்துவமனை என்றாலே மிஷன் என்பதிலிருந்து நாங்களும் இருக்கிறோம் என சொல்லும் விதமாக பல்வேறு பிரிவுகளுடன் மீனாட்சி மிஷன் மருத்துவமனையை தொடங்கி அதை நிலை நாட்டியிருப்பது சாதனை தான். புற்றுநோய் பிரிவு, இதய அறுவை சிகிச்சை, கருத்தரங்கு என விரிந்திருப்பது நல்லது தான்.

இவற்றிற்க்கெல்லாம் பி்ண்ணியில் இருக்கும் சேதுராமன் அல்லவா அந்த இளைஞர்களுக்கு முன்ணுதாரணமாக இருக்க வேண்டும்?

சினிமா மாயையில்லாமல் நாமும் திறமையால் முயற்ச்சியால் சாதனை படைக்கலாம் என்று ஊக்கமல்லவா கொள்ள வேண்டும். சேதுராமன் போன்றவர்களும் அதற்கல்லவா பாடுபட வேண்டும். அப்படி சட்டமன்றம் செல்லும் ஆசையிருந்தால் இதயத்தில் இடம் தருவாரா, சன் சின்னத்தில் போட்டியிட சொல்வாரா என காத்திருக்காமல் அவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகளில் தனித்து போட்டியிடலாமே?

பிரதிநித்துவம் வேண்டும் என்றால் இந்த தன் முயற்ச்சியும் முன்னேற்றமும் மக்களின் கவனம் பெறும். அவர்களும் வளர்வார்கள். தமிழகமும் வளம் பெறும்.

சேதுராமன் போன்றவர்கள் இன்னுமிருக்கலாம். அரசியல் தாண்டி அவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும், முண்ணுதாரணமாக அவர்களை கொள்ள வேண்டும் என்பதே விருப்பம்.

Monday, February 06, 2006

ஜெ. மீது அதிருப்தியா? திருப்தியா?

கொஞ்சம் புதிரான கேள்வி தான். அதன் பதில் கூட. ஒரு சாரரை திருப்தி படுத்த ஒரு காரியத்தை முனைகையில் அதனால்
பாதி்க்கபட்டவர்கள் அதிருப்தி ஆகி விடுகிறார்கள்.
1) லாட்டரியை தடை செய்ததால் ஏழைப்பெண்கள் நிம்மதியுற்றார்கள். ஆனால் அதை நம்பி தொழில் செய்யும் மக்களுக்கு மாற்று
திட்டங்கள் ஏதுமில்லாததால் அவர்கள் அதிருப்தியுற்றார்கள்.
2) அரசு ஊழியர்களை கைது செய்தபோது பாரட்டியவர்கள் லஞ்சம் கொடுத்து(ம்) காரியம் கைகூடாதவர்கள், கொடுக்க முடியதவர்கள்
மற்றும் லஞ்ச லாவண்யத்தை முற்றும் ஒழிக்க நிணைத்தவர்கள். 90% அரசு வருவாயை பங்கு போட்டுக்கொள்பவர்கள் என முழங்கிய பிறகு அவர்கள் எப்படி மனதார ஆதரிப்பார்கள்? மக்கள் மனதில் ஒருவித சந்தோஷம் ஏற்பட இந்த முழக்கமும் காரணம்
3) பலியிடுதல் கூடாது என்ற பிறகு, சாமி குத்தம் நேருமோ என கிராமத்து வாக்குகளும் அதிருப்தியில்.
4) கட்டாய மதமாற்றுச் சட்டம் எங்கே தங்களில் சிலரை தோலுரித்துக்காட்டிவிடுமோ என அதிருப்தியானவர்கள் ஒருபுறம்

இவையெல்லாமே இன்றைய தேதியில் வாபஸயாகிவிட்டது.

மழை நீர் சேகரிப்பு திட்டத்தை நிறைய கால அவகாசம் அளிக்காமல் சாம தான பேத கண்டிப்போடு அமல்படுத்திய முறையில்
அதிருப்தி கண்டவர்கள் அதன் பயனை கண்ட பிறகு சமாதானம் அடைந்திருப்பார்கள் என நம்பலாம்.

சுனாமி, வெள்ள நிவாரணப்பணிகளின் மூலமாக பாதிக்கபடாதவருக்கும் அள்ளித்தந்து ஆதரவு நிலையை உருவாக்கியிருக்கிறார்.

ஜெ சட்டத்தின் மூலமாகவோ, அல்லது தன் செயலாலோ இஸ்லாமியர்களை மட்டும் தான் அதிருப்தி்க்குள்ளாக்கவில்லை. ஆனால்
அன்னதானம் அளித்து கவர்ந்துவிட்டார்.

இச்சலுகைகள் தேர்தலுக்காக மட்டுமே என மக்கள் சந்தேகப்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் கடைசி நேரத்தில் அல்லாமல்
பாராளுமண்ற தேர்தல் தோல்வி கண்ட முதல் அமுல் படுத்தி வருவதால் ஜெ. உண்மையிலேயே திருந்தி, உணர்ந்து தான் செய்கிறார் என நம்பவும் வாய்ப்பிருக்கிறது.

அதோடு புதிய ஆட்சியில் இன்ன வாக்குறுதிகள் திட்டங்கள் என இன்னும் ஜெ. அறிவிக்கவில்லை. வீராணம், வீரப்பன் என ஜெ.
சொன்னவற்றை முடித்துக்காட்டியுள்ளதால் நம்பகத்தன்மை மக்களிடம் கூடி அதுவும் வாக்குகளை திருப்பலாம்.

உண்மை விடை தெரிய நாம் காத்திருக்க வேண்டியது தான்!

விஜயகாந்த் - 3

விஜயகாந்த் தன் கட்சி மாநாடு துவங்குவதற்கு முன்பே, விகடனுக்கும், குமுதத்திற்க்கும் கொடுத்த பேட்டியில் தான் டிசம்பர்
மாதத்திலிருந்து சுற்றுப்பயணம் போவதாக கூறியிருந்தார்.
ஆனால் தாங்கள் பேட்டி கண்டதையே மறந்தபடி ஜு.வியிலும், ரிப்போர்ட்டிரிலும் விஜயகாந்த் மாநாட்டிற்கு பிறகு அடங்கி
விட்டதாகவும், அடக்கபட்டதாகவும் கிசுகிசுத்து மாய்ந்தார்கள். இதோ விஜயகாந்த் தான் சொன்னபடி திட்டமிட்டபடி சுற்றுப்பயணம்
செய்ய ஆரம்பித்து இரண்டு மாதங்களாகிவிட்டன. இன்றைக்கு அவர் கடுமையான போட்டியை தருவார் என கணித்துக்கொண்டிருக்கிறார்கள்.

விஜயகாந்த் ஒரு திட்டமிடுதலுடன் தான் களத்திலிருக்கிறார். இந்த முறை அவர் தன் கணக்கை தொடங்கியதாகதான் கருத வேண்டும். கழக பாணி அரசியலலிருந்து முற்றிலுமாக விலகிட முடியாதபடி தான் அவர்களும் தங்கள் கட்சி மாநாடுகள், அலங்காரங்கள், தோரணைகள், பதவிகள், பட்டங்கள் என செயல்படுகிறார்கள். விஜயகாந்த் கூடுதல் கவனத்துடன் இவற்றை
தவிர்த்தால் நிச்சயம் நாம் மகிழலாம்.

கலைஞருக்கு பிறகு இந்த புரட்சி கலைஞர் தான், ஜெ.வுக்கு மாற்றாக, நிகராக மக்கள் கருதுவார்கள் என நான் நினைக்கிறேன். தமிழகத்தின் அணைத்து தரப்பு ஆதரவையும் பெற்ற தலைவராக வை.கோ.வையோ, ராமதாசையோ, ஸ்டாலினையோ மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நான் நினைக்கவில்லை.

2006-ல் தி.மு.க தனி பெரும்பான்மை பெற்று, ஸ்டாலினை முதல்வராக
தேர்ந்தெடுத்தால் தான் உண்டு. அந்த தி்ட்டத்தோடு தான் கருணாநிதி இந்த முறை தேர்தலின் மூலம் தான் முதல்வராக ஆசைப்படவில்லை என அருளியிருக்கிறார்.

ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு தலைமுறை வாக்காளர்கள் புதிதாக வாக்களித்தபடி இருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் மின்னணு
மயத்தினாலும், குளறுபடிகள் குறைந்துள்ளதாலும் வாக்குசாவடிக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் கூடியிருக்கிறது. காஞ்சியிலும்,
கும்மிடிப்பூண்டியிலும் வாக்களிப்பவர்களின் சதவிகிதம் கூடியதால் தான் அ.தி.மு.க எளிதில் வெற்றி பெற முடிந்தது. இவர்களில்
கணிசமானவர்கள் கழகங்களுக்கு மாற்றாக தான் வாக்களிக்கிறார்கள். அதே போல கழகங்களின் வாக்கு, காலத்தால் குறைந்தபடி
இருக்கும்(தீவிர ஆதரவாளர்கள் மற்றும் நீண்ட நாள் தொண்டர்களின் இயற்க்கையான அல்லது செயற்க்கையான மரணத்தினால்). இந்த புதிய வாக்காளர்களை கவர்வதில் தான் விஜயகாந்த் உட்பட பலரின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.

அடுத்த தேர்தலுக்குள் அவர் மற்றும் அவருடைய கட்சியினருடைனய செயல்பாடுகள், புதிய தலைமுறை வாக்காளர்கள் என சேர்ந்து
விஜயகாந்தின் "பேரரசை" நிர்ணயிப்பார்கள்.

வேட்பாளர் குஷ்பு

குஷ்பு மாக்ஸிம் பத்திரிக்கையின் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறார். புதிதாய் தொடங்கப்பட்ட ஆங்கில பத்திரிக்கைக்கு
தேவைக்கும் அதிகமான இலவச விளம்பரம் கிடைத்துவிட்டது. குஷ்பூவிற்க்கும் தான். தமிழ் திரைப்பட 'சத்யா' வின் தெலுங்கு
பதிப்பில் குஷ்பு நீச்சல் உடை என்கிற பெயரில் மிக குறைந்த அளவே உடுத்தி நடித்தார். மாக்ஸிமின் மார்ஃபிங் பொய் ஒன்றும்
பெரிதில்லை தான்.

இன்றோ அவர் தமிழகத்தின் மருமகள் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தாயுமாகிவிட்டார். ஆண்களுக்கு அவர் 'முன்னாள்'
கவர்ச்சியாகிவிட்டார். தாய்க்குலங்களுக்கோ அவர் கல்கி ஆக, ஜாக்(கெட்)பாட் ராணியாகி விட்டார்.

கற்பை பற்றி வாய் திறந்து, அனுதாபங்களை அள்ளிக்கொண்டார். உண்மையில் குஷ்புவின் நற்செய்தியால், பாட்டிகள் இன்றைய
சிறிசுகள் செய்யும் சேட்டைக்கும், அடிக்கும் கொட்டத்திற்க்கும் இது அவசியம் தான் என்ற கருத்தும்; பேத்திகள் கூடுதல் எச்சரிக்கை
வேண்டும் என்ற உறுதியும், இன்றைய தாய்மார்கள் தங்கள் பெண்கள் வீடு திரும்புவதற்க்குள் அதிக கவலையும் கொண்டார்கள். இந்த
மூன்று தலைமுறையுமே அடுத்து நடந்தவை அனைத்துமே தேவையற்றவை என தெளிவு கொண்டிருக்கிறார்கள். ஜெயா டி.வி.யில்
குஷ்புவின் கண்ணீரும், மேட்டூரில் அவர் எதிர்கொண்ட வரவேர்ப்பும் மக்களின் மனஓரத்தில் கரிசனம் உண்டாக்கியிருக்கிறது.

ஆகவே அவருடையை இன்றைய அந்தஸ்த்திற்கு மாக்ஸிமின் மார்ஃபிங் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் ஆகி விட்டது.
தமிழன் அந்த புத்தகத்தை வாங்கி அதன் வியாபரத்தை பெருக்கியிருப்பான். பெண்கள் இது என்ன சோதணை மேல் சோதணை என
அனுதாபம் கொண்டிருப்பார்கள். ஆக கூடி குஷ்புவின் புகழ்மானி உயர்ந்திருக்கிறது.

இந்த அரிய வாய்ப்பையே ஒரு பலமான அஸ்த்திரமாக்க ஜெ.யால் முடியும். அது குஷ்பு வேட்பாளர் போட்டியில் கலந்துகொள்வது
தான். சென்னையில் எஸ்.வி.சேகரும், ராதாரவியும் வெற்றி பெறும் போது குஷ்புவால் முடியாதா என்ன? குஷ்புவை ஸ்டாலினுக்கு
எதிராக இல்லாமல் அன்பழகனுக்கு எதிராக நிறுத்தினால் குஷ்புவும் தமிழக எம்.எல்.ஏ-யாகி அரசியல் சாதனை படைத்திடுவார்.

வளர்க குஷ்பு! வாழ்க தமிழகம்!

Friday, February 03, 2006

மீண்டும் சுவாமி

தமிழ் எழுத பழகிய பிறகு, முதன் முதலாக அரசியல் அலசல் தான் செய்ய தோன்றியது. தேர்தல் காலம் ஆயிற்றே!

இந்த வார விகடனில், சுப்பிரமணிய சுவாமியின் பேட்டி வெளிவந்திருக்கிறது.
ஜெயலலிதாவின் கடந்த ஆட்சியை மக்கள் வெறுக்க அஸ்திவாரம் போட்டவர் இந்த சுவாமி தான். தலைவியின் தடாலடியில் என்ன
எதிர் நடவடிக்கை எடுப்பது என துவண்டிருந்த நேரத்தில் டான்சி வழக்கை தொடுத்து எதிர்கட்சிகளின் துாக்கத்தை கலைத்தார்.

எல்லோரும் காமெடி என அசட்டை செய்துவிட அதை அரசியல் தெரிந்த கலைஞர் மிக சரியாக 2001 தேர்தலில் உபயோகபடுத்திக்கொண்டார். ஜெயித்தது தி.மு.க என்றாலும் , அதற்கு உரம் போட்டவர் சுவாமி தான்.

சோனியுவுடனான டீ பார்டி கூட, பி.ஜே.பி யுடன் கூட்டணி கண்டிருந்த ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக வலுவிழக்க சுவாமி ஆடிய
நாடகமாக இருக்கலாம்.

இந்த பேட்டியில், தமிழக அரசியலில் தன் கவனம் இன்னும் இருக்கிறது என பதிய வைத்திருக்கிறார். ஜெயேந்திரர் ஆதரவு நிலையுடன் இந்த முறை
ஜெ.யை கவிழ்க்க நினைக்கிறார். அவர் கனவு பலிக்கிறதா பார்ப்போம்.